தென்காசி அரசு ஆஸ்பத்திரி, கொரோனா வார்டில் கைக்குழந்தைகளுடன் சிகிச்சை பெறும் பெண்கள்

தென்காசி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் கைக்குழந்தைகளுடன் சிகிச்சை பெறும் பெண்களுக்கு சத்தான உணவு வழங்குவதாக மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

Update: 2020-04-27 23:00 GMT
தென்காசி, 

தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 37 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் புளியங்குடியைச் சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும், சிவகிரியை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்களில் புளியங்குடியை சேர்ந்தவருக்கு 2 மாத கைக்குழந்தையும், சிவகிரியை சேர்ந்தவருக்கு 5 மாத கைக்குழந்தையும் உள்ளனர். இவர்கள் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தநிலையில் தென்காசியில் சிகிச்சை பெறும் பெண்களுக்கு காலை, இரவில் இட்லியும், மதியம் சாப்பாடும் வழங்கப்படுவதாகவும் மற்றும் சத்தான உணவு எதுவும் வழங்கப்படுவதில்லை எனவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

இதுகுறித்து தென்காசி அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் கூறியதாவது:-

வழக்கமாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அவர்களை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு தான் அனுப்பி வருகிறோம். இந்த இரு பெண்களுக்கும் கைக்குழந்தைகள் உள்ளன. இந்த குழந்தைகளுக்கு நோய் தொற்று இல்லை. மேலும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கிறார்கள். இவர்களை நெல்லைக்கு அனுப்பினால் சிறு குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தென்காசியில் வைத்து சிகிச்சை அளிக்கிறோம். சமூக வலைத்தளங்களில் வந்த செய்தி உண்மை அல்ல. யாரோ வேண்டுமென்றே தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். கொரோனா வார்டில் 24 டாக்டர்கள் மற்றும் போதுமான செவிலியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

சத்தான உணவு

இவர்கள் 7 நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி பணியாற்றுகிறார்கள். பின்னர் 7 நாட்கள் வீட்டில் தனியாக இருந்து அடுத்த ஷிப்டிற்கு ஆஸ்பத்திரிக்கு பணிக்கு வருகிறார்கள். இவர்களுக்கு வழங்கப்படும் உணவு தான், கொரோனா பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் வழங்கப்படுகிறது. காலை மற்றும் இரவில் இட்லி, பூரி, பொங்கல் போன்றவை வழங்கப்படுகின்றன. காலை 11 மணிக்கு காய்கறி சூப் வழங்கப்படுகிறது. பழங்களும் வழங்கப்படுகின்றன. காலை, மாலையில் அரை லிட்டர் பால் வழங்கப்படுகிறது. இதுதவிர இவர்களுக்கு துணையாக யாருமில்லாததால் பாலை எப்போது வேண்டுமானாலும் சுட வைக்கும் அளவிற்கு இண்டக்சன் அடுப்பும், ஒரு பாத்திரமும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு நோயாளிக்கு என்ன வழங்க வேண்டும் என்றுள்ள விதியை மீறாத அளவில் அவர்களுக்கு உணவு வழங்குகிறோம். டாக்டர்களும் செவிலியர்களும் தங்களது உயிரை பணயம் வைத்து பணியாற்றுகிறார்கள்.

இவ்வாறு டாக்டர் ஜெஸ்லின் கூறினார்.

மேலும் செய்திகள்