மத்தூர் அருகே மின்வேலியில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி: 3 பேர் படுகாயம்

மத்தூர் அருகே மின் வேலியில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2020-04-27 23:15 GMT
மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கே.எட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 26). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். தற்போது ஊரடங்கு காரணமாக அவர் வீட்டில் இருந்தார்.

இந்த நிலையில் சதாசிவம் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (40), கோபாலகிருஷ்ணன், விக்னேஷ் (24) உள்பட 7 பேர் சாலூருக்கு முயல் வேட்டைக்கு புறப்பட்டனர்.

அந்த பகுதியில் உள்ள பாகற்காய் தோட்டம் அருகில் சென்றனர். அப்போது அந்த தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி சதாசிவம் சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்து பலியானார். அவருடன் சென்ற அன்பழகன், கோபாலகிருஷ்ணன், விக்னேஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மற்ற 3 பேரும் காயமின்றி தப்பினார்கள்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான சதாசிவத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த அன்பழகன், கோபாலகிருஷ்ணன், விக்னேஷ் ஆகியோரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அனுமதியின்றி மின்வேலி அமைத்ததாக லட்சுமணன் (52), அவரது மகன் சபரி (27) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்