கோவையில் பரிதாபம் கழிவறைக்கு சென்றபோது விஷவாயு தாக்கி தொழிலாளி சாவு மேலும் 2 பேருக்கு சிகிச்சை

கோவையில் கழிவறைக்கு சென்றபோது விஷவாயு தாக்கி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக இறந்தார். மேலும் அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2020-04-27 23:33 GMT
கோவை,

கோவை பீளமேடு ஹட்கோ காலனி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 72). இவரது மனைவி பத்மாவதி (55) இவர்களுக்கு பாலாஜி (49) முரளி (45) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொள்ளாமல் தனது தாய் தந்தையுடன் வசித்து வந்தனர். பாலாஜி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். முரளி கோவையில் உள்ள ஒரு தனியார் வாட்ச் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல வீட்டில் இருந்தவர்கள் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் ஸ்ரீதர் கழிவறைக்கு சென்றார். அப்போது கழிவறை முழுவதும் விஷவாயு பரவியிருந்தது. இதனை சுவாசித்த அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். நீண்ட நேரமாகியும் தந்தை திரும்பி வராததால் அவரை தேடி அவரது 2-வது மகன் முரளி கழிவறைக்கு சென்றார். அவரும் அங்கேயே மயங்கி விழுந்தார்.

சாவு

தந்தை மற்றும் தனது தம்பி நீண்ட நேரமாக திரும்பி வராததால் சந்தேகமடைந்த பாலாஜி கழிவறைக்கு சென்றார். அப்போது விஷவாயு சுவாசித்த அவர் அங்கேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். இதனைப் பார்த்த பானுமதி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து அக்கம் பக்கத்தினருக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மயங்கி கிடந்த ஸ்ரீதர், முரளி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் பீளமேடு இன்ஸ்பெக்டர் ஜோதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கழிவறையில் விஷவாயு தாக்கி இறந்த தொழிலாளியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காரணம் என்ன?

இது தொடர்பாக தடயவியல் துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தடயங்களை சேகரித்தனர். கழிவறை சில நாட்களுக்கு முன்பு சுத்தம் செய்யப்பட்டதாக தெரிகிறது. கழிவறை அருகே ஜெனரேட்டர் உள்ளது. அந்த ஜெனரேட்டர் பழுதடைந்து அதிலிருந்து கார்பன் மோனாக்சைடு அதிக அளவு வெளியேறி மயக்கத்தை உயிரிழப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்