சாராயம் விற்பதை தட்டிக்கேட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

அரியூர் அருகே சாராயம் விற்பதை தட்டிக்கேட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-04-30 05:23 GMT
வேலூர்,

வேலூரை அடுத்த அரியூர் அருகேயுள்ள புலிமேடு மலைப்பகுதியில் மர்மகும்பல் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தது. சாராயம் குடிக்க மதுபிரியர்கள் பலர் அந்த மலைப்பகுதிக்கு வந்து சென்றனர். இதனை விரும்பாத புலிமேடு கிராமமக்கள் சாராயம் காய்சுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 1-ந் தேதி இது தொடர்பாக கிராம மக்களுக்கும், சாராயம் காய்ச்சிய கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், ஆத்திரம் அடைந்த சாராய கும்பலை சேர்ந்தவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து கிராம மக்களை நோக்கி சுட்டனர். இதில் அதே பகுதியை சேர்ந்த பூபாலன், சங்கர், அண்ணாமலை ஆகியோர் மீது குண்டு பாய்ந்ததில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து 3 பேரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குண்டர் சட்டத்தில் கைது

இது தொடர்பாக அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த நிலையில் துப்பாக்கி சூடு நடத்திய கும்பலை சேர்ந்த அணைக்கட்டு தாலுகா பலாமரத்துகொல்லை பகுதியை சேர்ந்த வெள்ளையன் என்ற கிருஷ்ணன் (வயது 28), நடராஜன் (20) மற்றும் 17 வயதுடைய வாலிபர் ஆகிய 3 பேர் ஒரு நாட்டுத்துப்பாக்கியுடன் கடந்த 7-ந் தேதி அரியூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். இவர்களில் கிருஷ்ணன், நடராஜன் ஆகியோர் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 17 வயதுடைய வாலிபர் சிறார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சாராயம் விற்பதை தட்டிக்கேட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரத்துக்கு, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கிருஷ்ணன், நடராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

அதையடுத்து அதற்கான ஆணையின் நகலை வேலூர் ஜெயிலில் இருக்கும் இருவரிடமும் போலீசார் வழங்கினர்.

மேலும் செய்திகள்