கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு தேசிய புவிசார் குறியீடு கிடைத்து உள்ளது. இதனால் கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2020-04-30 22:45 GMT
கோவில்பட்டி, 

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே தனித்துவமான பண்புகள், தரத்துடன் கிடைக்கக்கூடிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இதன்மூலம் புவிசார் குறியீடு பெற்ற பொருளை சம்பந்தப்பட்ட இடத்தை தவிர்த்து, மற்ற இடங்களில் தயாரித்து அதே பெயரில் சந்தைப்படுத்துவது தடை செய்யப்படுகிறது. மேலும், அந்த பொருட்களுக்கு உலகளவிலான சந்தையை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்பாக அமையும். காஞ்சீபுரம் பட்டுசேலை, மதுரை மல்லிகை, பத்தமடை பாய் என்று பல்வேறு பொருட்களுக்கும் புவிசார் குறியீடு கிடைத்து உள்ளது.

இந்த நிலையில் கரிசல் மண் நிறைந்த வானம் பார்த்த பூமியான கோவில்பட்டி பகுதியில் விளைந்த நிலக்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலைமிட்டாய் தனிச்சுவை கொண்டது. கோவில்பட்டி, கழுகுமலை, அருப்புக்கோட்டை, சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விளைவிக்கப்பட்ட நிலக்கடலையுடன், தேனி, சேலம் பகுதியில் இருந்து பெறப்படும் நாட்டு சர்க்கரையை பாகாக்கி கலந்து, அதனுடன் கிராம்பு, ஏலக்காய், சுக்கு சேர்த்து தயாரிக்கப்படும் கோவில்பட்டி கடலைமிட்டாய் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய அனைவருக்கும் ஏற்ற ஊட்டச்சத்து மிகுந்த தின்பண்டமாக உள்ளது.

புவிசார் குறியீடு

கோவில்பட்டி பகுதியில் ஏராளமான கடலைமிட்டாய் நிறுவனங்கள் உள்ளன. பெரும்பாலானவர்கள் தங்களது வீடுகளிலேயே குடிசை தொழிலாக கடலைமிட்டாயை தயாரித்து விற்பனை செய்கின்றனர். இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கும், வளைகுடா நாடுகளுக்கும் பெருமளவில் கடலைமிட்டாய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

எனவே, கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு பெறுதற்கு, கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர் சங்கத்தினர் கடந்த 2014-ம் ஆண்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்தனர். இந்த நிலையில் கோவில்பட்டி கடலைமிட்டாய்க்கு தேசிய புவிசார் குறியீடு நேற்று வழங்கப்பட்டது.

உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

இதன்மூலம் கோவில்பட்டி கடலைமிட்டாயை உலகளவில் சிறந்த தரத்துடனும், தனித்தன்மையுடனும் எளிதில் சந்தைப்படுத்த முடியும். உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதுடன், அங்கு சட்ட பாதுகாப்பும் வழங்கப்படும்.

மற்ற இடங்களில் கடலைமிட்டாயை தயாரிப்பவர்கள், அதனை கோவில்பட்டி கடலைமிட்டாய் என்று சந்தைப்படுத்தினால் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள முடியும். இதனால் கோவில்பட்டி கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்