ஊரடங்கில் தேவையின்றி சுற்றித்திரிபவர்களை கண்காணிக்க சேலத்தில் புதிய செல்போன் செயலி அறிமுகம்

ஊரடங்கில் தேவையின்றி சுற்றித்திரிபவர்களை கண்காணிக்க சேலத்தில் புதிய செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-04-30 23:15 GMT
சேலம், 

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களிடையே சமூக தொற்று ஏற்படாமல் தடுக்கும் முயற்சியாக மக்கள் அதிகம் கூடுவதை தடுத்திட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி தினமும் அத்தியாவசிய தேவையின்றி பலர் வெளியே சுற்றுகிறார்கள். அவர்களை பிடித்து போலீசார் கைது செய்து வருகிறார்கள். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. மேலும் பல இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

இதனிடையே சேலம் மாவட்டத்தில் தேவையின்றி சாலையில் சுற்றித்திரிபவர்களை கட்டுப்படுத்த எஸ்-டிராக் ( S - --T-R-A-CK APP ) என்ற புதிய செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட நிர்வாகத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியை மாவட்ட கலெக்டர் ராமன் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். தொடர்ந்து அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றுபவர்களை போலீஸ் சோதனைச்சாவடிகளில் கண்காணிக்கும் போது, காவலரின் செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள எஸ்-டிராக் செயலியில் அந்த நபர்களை புகைப்படம் எடுத்து அவர்கள் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களை பதிவேற்றம் செய்து விடுவார்கள்.

பின்னர் அதே நபர்கள் மற்றொரு சோதனைச்சாவடியில் போலீசார் கண்டறியும் பட்சத்தில் அந்த நபர்களை எஸ்-டிராக் செயலியில் புகைப்படம் எடுத்த உடனேயே அவர்கள் ஏற்கனவே எந்த சோதனைச்சாவடியில் கண்டறியப்பட்டனர்? என்பது உள்பட அனைத்து விவரங்களும் தெரிந்து விடும். மேலும் அவர்கள் எத்தனை முறை தேவையின்றி எந்தெந்த இடங்களில் சென்றுள்ளார் என்பது குறித்து விவரங்கள் அனைத்தும் அதில் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு இருக்கும். அவ்வாறு தேவையின்றி வெளியில் சுற்றும் நபர்களை இச்செயலியின் மூலம் எளிதில் கண்டறிந்து அவர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்குவதோடு மட்டும் அல்லாமல் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை மீறியதற்கான தண்டனையும் வழங்க முடியும்.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த புதிய செயலி அறிமுக நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், போலீஸ் சூப்பிரண்டு தீபாகனிக்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், மாவட்ட வருவாய் அதிகாரி திவாகர், துணை கமிஷனர் தங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்