கோவை மாவட்டத்தில் 4,348 ஆசிரியர்கள் ‘ஆரோக்ய சேது’ செயலியை பதிவிறக்கம் செய்தனர்

கோவை மாவட்டத்தில் 4,348 ஆசிரியர்கள் ‘ஆரோக்ய சேது’ செயலியை பதிவிறக்கம் செய்து உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2020-04-30 22:51 GMT
கோவை,

கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிய உதவும் ‘ஆரோக்ய சேது’ மற்றும் கோவிட்-19 கேர் ஆகிய செல்போன் செயலிகளை பதிவிறக்கம் செய்து ஆசிரியர்கள், மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து தொடக்க கல்வித்துறை சார்பில் ‘ஆரோக்ய சேது’ கோவிட்-19 கேர் செயலிகளை ஆசிரியர்கள் தங்களின் செல்போன்களில் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, தொடக்க கல்வித்துறையின் கீழ் உள்ள ஆசிரியர்கள் பலர் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து வருகின்றனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

பதிவிறக்கம்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸ் குறித்து தெரிந்துகொள்வதற்காகவும், கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிய உதவும் ‘ஆரோக்ய சேது’, கோவிட்-19 கேர் ஆகிய செல்போன் செயலிகளை பதிவிறக்கம் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி தமிழகத்தில் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பணி அல்லாதவர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 72 பேர் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து உள்ளனர். அவர்களில் 53,731 பேர் கோவிட்-19 என்ற செயலியையும், 84 ஆயிரத்து 341 பேர் ‘ஆரோக்ய சேது’ என்ற செயலியையும் பதிவிறக்கம் செய்து உள்ளனர்.

இந்தநிலையில் கோவை மாவட்டத்தில் 4,691 தொடக்க கல்வி ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களில் 4,348 பேர் இந்த இரு செயலிகளையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதில் மீதமுள்ள ஆசிரியர்களையும் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் மேல்நிலை வகுப்பு ஆசிரியர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்