தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும் - முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள்

தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-05-01 00:30 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் 4-ந் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் தொழில் நிறுவனங்கள் திறக்கப்படும் என்று முதல்- மந்திரி எடியூரப்பா நேற்று மதியம் அறிவித்தார்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் முன்னணி தொழில் நிறுவன நிர்வாகிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார்.

இதில் பேசிய தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள், கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை பாராட்டினர். அப்போது பேசிய எடியூரப்பா, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்பது அரசுக்கு தெரியும். கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பதை தவிர வேறு வழி தெரியவில்லை. நீங்கள் உங்களின் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை முழுமையாக வழங்குங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

தொழிலாளர்களுக்கு முகக்கவசம்

மேலும் எடியூரப்பா பேசியதாவது:-

கர்நாடகத்தில் பசுமை மண்டலத்தில் ஏற்கனவே தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வருகிற 4-ந் தேதி முதல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்க மந்திரிசபையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட உள்ளது. அதனை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

உங்களின் தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு முகக்கவசம் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். தூய்மையை பராமரிக்க வேண்டும். சமூக விலகலை கட்டாயம் பின்பற்ற வேண்டும். உங்களின் கோரிக்கைகளை முடிந்தவரை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய அரசு வழிகாட்டுதலை வழங்கினால், தொழிலாளர்களின் பணி நேரத்தை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

ஜெகதீஷ்ஷெட்டர்

இந்த கூட்டத்தில் தொழில் துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர், தொழிலாளர் நலத்துறை மந்திரி சிவராம் ஹெப்பார், கர்நாடக தொழில் வர்த்தக சபை நிர்வாகிகள், சிறு-குறு தொழில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்