மணல் கடத்தலை தடுத்த போலீசார் மீது மினிலாரியை ஏற்றி கொலை செய்ய முயற்சி 4 பேர் கைது

குடியாத்தம் அருகே மணல் கடத்தலை தடுத்த போலீசார் மீது மினிலாரியை ஏற்றி கொலை செய்ய முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-05-01 04:07 GMT
குடியாத்தம்,

ஊரடங்கை சாதகமாகப் பயன்படுத்தி, சமூக விரோதிகள் பலர் குடியாத்தம் தாலுகா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள பாலாற்றில் இருந்து இரவில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமார் மற்றும் போலீசார் பெருமாள், மஞ்சுநாத் ஆகியோர் குடியாத்தத்தை அடுத்த ஒலக்காசி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த ஒரு மினி லாரியை மடக்கினர். ஆனால் மணல் கடத்தி வந்த மினிலாரி போலீசார் மீது மோதுவதுபோல் வந்தது. அதிர்ச்சி அடைந்த போலீசார் சற்று விலகி தப்பினர். ஆனால் மணல் கடத்தல் கும்பல் போலீசார் மீது மினிலாரியை ஏற்றி கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. அவர்கள் மினிலாரியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றனர்.

4 பேர் கைது

இதையடுத்து இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் மினிலாரியை விரட்டிச் சென்று மடக்கி, குடியாத்தம் கிராமிய போலீசுக்கு கொண்டு வந்து விசாரித்தனர். குடியாத்தத்தை அடுத்த கள்ளூரை சேர்ந்த குமரவேல் என்கிற வேலு (வயது 33), லாரியை ஓட்டி வந்த டிரைவர் குடியாத்தத்தை அடுத்த ஆர்.வெங்கடாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் (31), லாரி உரிமையாளர் மேல்முட்டுகூரை சேர்ந்த விஜயகுமார் (55), தட்டாங்குட்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (25) எனத் தெரிய வந்தது. 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மினிலாரியை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது மணல் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்