புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மகனுக்கு சிகிச்சை பெற வந்தவர் ஊர் திரும்ப முடியாமல் தவிப்பு

புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக வந்த தந்தை, மகன் ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்களை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் காரில் அனுப்பிவைத்தனர்.

Update: 2020-05-01 04:40 GMT
புதுச்சேரி,

சேலம் மாவட்டம் பச்சைமலை பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 45). இவரது மனைவி காந்தி. அவர்களுக்கு மோனிஷ்குமார் (5) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் மோனிஷ்குமார் கடந்த 3 வருடமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தான். இதற்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அவ்வப்போது தந்தையுடன் வந்து சிறுவன் சிகிச்சை பெற்று வந்தான்.

கடந்த 28-ந் தேதி சிறுவனின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனே பெற்றோர் அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு சிறுவன் மோனிஷ்குமாரை தந்தை ரவீந்திரனுடன் டாக்டர்கள் அனுப்பி வைத்தனர்.

ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதி

பின்னர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்கு ஆயத்தமாக ரவீந்திரன் வராததால், சிறுவன் மோனிஷ்குமார் நேற்று மதியம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான்.

தந்தை - மகன் தவிப்பு

தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் சேலத்திற்கு எப்படி செல்வது எனத்தெரியாமல் ரவீந்திரன் தனது மகனுடன் புதுவை இந்திரா காந்தி சதுக்கம் அருகே தவித்துக்கொண்டிருந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கவனித்தனர். அவர்களிடம் சென்று விசாரித்தபோது, ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்துவிட்டு, ஊர் திரும்ப வழியில்லாமல் நிற்பதாக ரவீந்திரன் தெரிவித்தார். பின்னர் அவர்களை புதுவை கலெக்டர் அலுவலகத்திற்கு போலீசார் அழைத்துச்சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த துணை தாசில்தார் செந்தில்குமார் தனது சொந்த செலவில் காரை வாடகைக்கு எடுத்து ரவீந்திரன், மோனிஷ்குமாரை சேலத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் போலீசார் தங்களால் முடிந்த பண உதவி செய்தனர். அந்த தொகையை ரவீந்திரனிடம் வழங்கி, மகனுடன் அனுப்பி வைத்தனர்.

இக்கட்டான நேரத்தில் போலீசார், அதிகாரிகளின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்