ஊரடங்கால் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நிறுத்தம்; பெற்றோர்கள் வருத்தம்

ஊரடங்கால் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடத்த முடியாததால் பெற்றோர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

Update: 2020-05-01 05:36 GMT
கறம்பக்குடி, 

ஊரடங்கால் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடத்த முடியாததால் பெற்றோர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

வளைகாப்பு விழா

திருமணமாகி முதல் முறையாக தாய்மை அடைய போகும் பெண்களுக்கு பிறந்த வீட்டார் சார்பில், வளைகாப்பு விழா நடத்தப்படுவது வழக்கம். கலாசாரம் சார்ந்து நடத்தப்படும் இந்த விழாக்கள் 7 அல்லது 9-வது மாதத்தில் நடைபெறும். உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி சீர்வரிசை பொருட்களுடன் சென்று கர்ப்பிணி பெண்ணை அலங்காரம் செய்து வளைகாப்பு விழா நடத்துவார்கள்.

இதில் 9 வகையான சாதத்துடன் விருந்து பரிமாறப்படும். சமீப காலமாக கிராம பகுதியில் கறிவிருந்தும் பரிமாறப்படுகிறது. வசதிக்கு ஏற்றாற் போல் நடத்தப்படும் இந்த விழாவானது, சிலர் பத்திரிகை அச்சடித்து நூற்றுக்கணக்கானோருக்கு அழைப்பு விடுத்து திருமண மண்டபங்களில் நடத்துவது உண்டு. பொதுவாக வளைகாப்பு விழா பெண்களுக்கு திருமண நாளை விட மகிழ்ச்சி தரக்கூடியதாகவே இருக்கும். இதனால் வளைகாப்பு விழாவை ஒவ்வொரு பெற்றோரும் கடன் வாங்கியாவது சிறப்பாக நடத்துவார்கள்.

கர்ப்பிணிகளுக்கு ஏக்கம்

இந்த விழாக்கள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு உடல் மற்றும் மனம் சார்ந்து ஆரோக்கியம் தரக்கூடியது என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வறுமை கோட்டின் கீழ் உள்ள ஏழை, எளிய மக்களும் பயன்பெறும் வகையில், அரசே சமுதாய வளைகாப்பு விழாக்களை நடத்தி முதல் முறையாக தாய்மை அடைய போகும் பெண்களை மகிழ்விக்கும்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் ஏற்படுத்தி உள்ள தாக்கத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழாவை நடத்த முடியாமல் பெற்றோர்கள் வருத்தமடைந்து உள்ளனர். கர்ப்பிணிகளுக்கு அந்த ஏக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர்களில் திருமணம் செய்து கொடுத்த பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களை வைத்து வளைகாப்பு விழாவை பெற்றோர்கள் நடத்தி விட்டனர்.

பெற்றோர்கள் வருத்தம்

ஆனால் வெளியூர்களில் உள்ள பெண்களுக்கு பெற்றோர்கள் சென்று வளைகாப்பு விழாவை நடத்த முடியாத நிலை உள்ளதால் வருத்தமடைந்து உள்ளனர். இதுகுறித்து கறம்பக்குடி பகுதியை சேர்ந்த ஒருவர் கூறுகையில், வெளியூர்களில் உள்ள பெண்களை அழைத்து வருவதற்கோ, அங்கு சென்று வளைகாப்பு விழா நடத்துவதற்கோ முடியாத நிலை உள்ளது. தட புடலாக நடத்த எண்ணியிருந்த வளைகாப்பு விழாக்கள் நான்கைந்து பேருடன் நடத்தி முடிக்க வேண்டி உள்ளதால் வருத்தமாக உள்ளது என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்