பண்ருட்டி அருகே வடமாநில தொழிலாளி அடித்துக் கொலை வாலிபர் கைது

பண்ருட்டி அருகே வடமாநில தொழிலாளியை அடித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-05-01 22:00 GMT
பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் உள்ள முந்திரி தொழிற்சாலைகளில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். அந்த வகையில் காடாம்புலியூர் தெற்கு மேல்மாம்பட்டில் உள்ள ஒரு தனியார் முந்திரி தொழிற்சாலையில் அசாம் மாநிலம் கரிவ்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த சோஜேஸ்நாத்(வயது 40), பிஸ்வாஸ்நாத்(25), நரேந்திரமிஸ்நாத்(23) ஆகிய 3 பேரும் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் காடாம்புலியூர் செட்டிதெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி உள்ளனர். இவர்களுடன் அதே மாநிலத்தை மேலும் 3 பேரும் தங்கியிருந்து ஒன்றாக சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.

இவ்வாறு சாப்பிடும் நேரத்தில் நரேந்திரமிஸ்நாத் அதிக அளவில் சாப்பிடுவதாக கூறி அவரை சோஜேஸ்நாத், பிஸ்வாஸ்நாத் ஆகிய இருவரும் அடிக்கடி கேலி செய்ததாக தெரிகிறது.

அடித்துக் கொலை

அந்த வகையில் நேற்று முன்தினம் இரவும் நரேந்திரமிஸ்நாத்தை சோஜேஸ்நாத், பிஸ்வாஸ்நாத் கேலி செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த நரேந்திரமிஸ்நாத் நேற்று காலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சோஜேஸ்நாத், பிஸ்வாஸ்நாத் ஆகிய இருவரின் தலையில் இரும்புககுழாயால் சரமாரியாக தாக்கினார். இதில் இருவரும் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடித்தனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். பின்னர் இதுபற்றி காடாம்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராசன், காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலர்விழி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலத்த காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சோஜேஸ்நாத் பரிதாபமாக உயிரிழந்தார்.

வாலிபர் கைது

பிஸ்வாஸ்நாத்துக்கு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே வீட்டில் இருந்து தப்பி ஓட முயன்ற நரேந்திரமிஸ்நாத்தை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

வடமாநில தொழிலாளி இரும்புக்குழாயால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்