அரகண்டநல்லூர், திருக்கோவிலூர் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 20 பேர் கைது

அரகண்டநல்லூர், திருக்கோவிலூர் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-05-01 22:18 GMT
திருக்கோவிலூர்,

திருக்கோவிலூரை அடுத்த அரகண்டநல்லூர் அருகே உள்ள கல்லந்தல் கிராமத்தில் ஏரி அருகில் உள்ள காப்புக்காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் விழுப்புரம் மாவட்ட மத்திய கலால் பிரிவு போலீஸ் ஏட்டு குமரன் மற்றும் போலீசார் காப்புக்காட்டுக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த அருணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் அய்யப்பன் (வயது 25), சாமிக்கண்னு (50), ரங்கநாதன் மகன் நாகராஜன் (28), காந்தி (27) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாராய ஊறல் அழிப்பு

அத்துடன் கள்ளச்சாராயம் காய்ச்ச வைத்து இருந்த 1000 லிட்டர் சாராய ஊறலையும், 25 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் பறிமுதல் செய்து அழித்தனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். கைது செய்யப்பட்ட 4 பேரையும் அரகண்டநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், பொன்னுரங்கம் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

திருக்கோவிலூர்

அதேபோல் திருக்கோவிலூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான திருக்கோவிலூர், திருப்பாலபந்தல், ரிஷிவந்தியம், பகண்டைகூட்டுரோடு, மணலூர்பேட்டை, சங்கராபுரம், வடபொன்பரப்பி, மூங்கில்துறைப்பட்டு ஆகிய காவல் நிலைய சரக பகுதிகளில் துணைபோலீஸ் சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவசந்திரன், குணபாலன், ராஜசேகர், அன்பழகன் மற்றும் போலீசார் நடத்திய சோதனையில் கள்ளச்சாராயம் காய்ச்சி, விற்ற 16 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள சாராய ஊறல் மற்றும் கள்ளச்சாராயத்தை கைப்பற்றி அழித்தனர். 

மேலும் செய்திகள்