கொரோனா பாதிப்பு குறைந்தது: ஆரஞ்சு நிற பட்டியலில் திண்டுக்கல் மாவட்டம்

கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததால் திண்டுக்கல் மாவட்டம் ஆரஞ்சு நிற பட்டியலில் இடம் பிடித்தது.

Update: 2020-05-01 23:51 GMT
திண்டுக்கல்,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதற்கிடையே ஊரடங்கு உத்தரவை தளர்வு செய்யும் வகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, மாவட்டங்களை பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என 3 வகையாக மத்திய அரசு பட்டியலிட்டு வருகிறது. அதன்மூலம் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை தொடக்கத்தில் கொரோனா தொற்று அதிகமாக கண்டறியப்பட்டது. இதனால் திண்டுக்கல் மாவட்டம் சிவப்பு நிற பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும் மாவட்டம் முழுவதும் நேற்று வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 81 ஆகும். அதேநேரம் நேற்று முன்தினம் நிலவரப்படி கடந்த ஒரு வாரமாக புதிதாக யாருக்கும் நோய் தொற்று கண்டறியப்படவில்லை. மேலும் நேற்று வரை மொத்தம் 73 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுதவிர முதியவர் ஒருவர் இறந்தார். இதனால் தற்போது கொரோனா பாதிப்புடன் 7 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் 36 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அந்த பகுதிகளில் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. எனினும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நேற்று வரை புதிதாக யாருக்கும் தொற்று இல்லை. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் நோய் தொற்று வெகுவாக குறைந்துள்ளது.

ஆரஞ்சு நிறம்

இதைத்தொடர்ந்து சிவப்பு நிற பகுதியாக இருந்த, திண்டுக்கல் மாவட்டம் நேற்று ஆரஞ்சு நிற பகுதியாக மாற்றப்பட்டு இருக்கிறது. இது திண்டுக்கல் மக்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் விரைவில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்