புதுச்சேரி ஆரஞ்சு மண்டலமாக அறிவிப்பு நாராயணசாமி தகவல்

புதுச்சேரியை ஆரஞ்சு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2020-05-02 03:48 GMT
புதுச்சேரி,

புதுவை இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவை பிராந்திய பகுதியான காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் யாருக்கும் பாதிப்பில்லை. நேற்று முன்தினம் மத்திய அரசிடம் இருந்து ஓர் அறிவிப்பு வந்துள்ளது.

அதில் காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகள் பச்சை மண்டலமாகவும், புதுச்சேரி ஆரஞ்சு மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வருகிற 4-ந் தேதி தொழிற்சாலைகள், கடைகள் திறப்பது தொடர்பாக மத்திய அரசு அறிவிக்கும் முடிவின் படி நாங்களும் அமைச்சரவையில் முடிவெடுத்து அறிவிப்போம்.

ஜிப்மரில் 3 பேர் சிகிச்சை

பண்ருட்டியை சேர்ந்த 3 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். ஆனால் அவர்கள் புதுவையை சேர்ந்தவர்கள் என்று சிலர் தவறான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். வாரணாசியில் தவிக்கும் புதுவையை சேர்ந்தவர்களை அழைத்து வர உத்தரபிரதேச முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதினேன். அவரும் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். அவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்து வருகிறோம்.

இதேபோல் மத்திய பிரதேசத்தில் தவிக்கும் நமது மாணவிகளை அழைத்து வர அந்த மாநில முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளேன். அதற்கும் விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

விதிமுறை...

நம்மை சுற்றியுள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு உள்ளது. எனவே நாம் விதிமுறைகளை கடுமையாக கடை பிடிக்க வேண்டும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) எந்த அளவுக்கு மத்திய அரசு விதிமுறைகளை தளர்த்த போகிறது என்று தெரியவில்லை. பிற மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு கூட சம்பளத்தை குறைத்து உள்ளனர். ஆனால் நாம் ஏப்ரல் மாதம் வரை முழு சம்பளம் வழங்க உள்ளோம். இனியும் வருமானம் கிடைக்கவில்லை என்றால் அரசு ஊழியர்கள் சில தியாகங்களை செய்ய தயாராக வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் தியாகங்களுக்கு தயாராக வேண்டும். அனைவரும் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்