வேலூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் ரத்ததான முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்

வேலூரில் பள்ளி கல்வித்துறை சார்பில் ரத்ததான முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2020-05-02 04:50 GMT
வேலூர்,

வேலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.

இதில், வேலூர் மாவட்டத்தில் உள்ள சாரண-சாரணியர்கள், ஜூனியர் ரெட்கிராஸ், நாட்டு நலப்பணி திட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை டாக்டர்கள் ரத்தத்தை பெற்று கொண்டனர். ஊரடங்கு உத்தரவால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்த இருப்பு குறைந்துள்ளது. இதனை நிவர்த்தி செய்யும்பொருட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

முகாமில், காட்பாடி ரெட்கிராஸ் சங்க செயலாளர் ஜனார்த்தனன், முகாம் ஒருங்கிணைப்பாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக வேலூர் அண்ணாசாலையில் உள்ள சிசுபவனில் செவித்திறன், பேச்சுத்திறன் குறைபாடு உடைய 40 குழந்தைகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கொரோனா தொற்று ஏற்படாமல் பாதுகாத்திட சத்தான உணவுப்பொருட்கள், கையுறை, முக கசவம், கிருமிநாசினி ஆகியவற்றை கலெக்டர் சண்முகசுந்தரம் வழங்கினார். இதில், மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்