டிரெய்லர் லாரி உரிமையாளர்களுக்கு ரூ.77 கோடி இழப்பு: 21 ஆயிரம் டிரைவர், கிளினர் வேலையின்றி தவிப்பு

கொரோனா பரவலை தடுக்க தொடர் ஊரடங்கால் டிரெய்லர் லாரி உரிமையாளர்களுக்கு இதுவரை ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. 21 ஆயிரம் டிரைவர், கிளினர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.

Update: 2020-05-02 23:00 GMT
நாமக்கல், 

தமிழகத்தில் சுமார் 7 ஆயிரம் டிரெய்லர் லாரிகள் உள்ளன. இவை நாமக்கல், சென்னை, தூத்துக்குடி, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இயக்கப்படுகின்றன. டிரெய்லர் லாரிகள் கனரக பொருட்களை ஏற்றிச்செல்லும். குறிப்பாக ராணுவ தளவாடங்கள், மின்சார உற்பத்திக்கு தேவையான பாய்லர்கள் மற்றும் உதிரிபாகங்கள், தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த கொண்டு செல்லும் எந்திரபொருட்கள் மிக அதிக எடை உள்ள கிரேன் போன்ற பொருட்கள், காற்றாலை மின்உற்பத்தி பொருட்கள், ரெயில் தண்டவாளம் மற்றும் பெட்டிகள் போன்ற பலவகை கனரக பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் ஆகும்.

கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் கடந்த 24-ந் தேதி நள்ளிரவு முதல் தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் டிரெய்லர் லாரி போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 21 ஆயிரம் டிரைவர், கிளினர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நாமக்கல் டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கத்தின் உபதலைவர் தாமோதரன் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் டிரெய்லர் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன உரிமையாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். வெளிமாநிலத்திற்கு பாரம் ஏற்றிச்சென்ற பல டிரெய்லர் லாரிகள் ஆங்காங்கே பாதுகாப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளன. சில டிரைவர்கள் ஊருக்கு வந்தாலும், பல டிரைவர்கள் வாகனங்களில் இருந்து அவதிப்படுகின்றனர். உணவு வசதிகள் மற்றும் பாதுகாப்பின்றி சிரமப்படுகின்றனர்.

பெரிய நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கினால்தான் டிரெய்லர் வாகனங்களில் லோடு ஏற்ற இயலும். இந்த வாகனங்களை நிறுத்தி வைத்திருக்கும் இந்த சூழ்நிலையில் ஒரு வண்டிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் வருமானம் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 37 நாட்களாக டிரெய்லர் உரிமையாளர்களுக்கு சுமார் ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஒவ்வொரு டிரெய்லர் வாகனத்திற்கும் காப்பீட்டு தொகை, காலாண்டு வரி, எப்.சி. என மாதத்திற்கு ரூ.13 ஆயிரம் வரை செலவழிக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. மேலும் டிரைவர்களுக்கு மாதாந்திர சம்பளமும், அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டிய சூழ்நிலையில் உள்ளதால் டிரெய்லர் வாகன உரிமையாளர்கள் கடுமையாக பாதிப்படைந்து உள்ளனர். தற்போது அத்தியாவசிய பொருட்களுக்காக பிற லாரிகள் ஓரளவிற்கு இயக்கப்பட்டாலும், ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் பிற லாரிகள் ஓடத்தொடங்கி விடும். ஆனால் டிரெய்லர் லாரிகள் அவ்வாறு இயங்க இயலாது. தொழிற்சாலைகளில் உற்பத்தி தொடங்க குறைந்தது 4 மாதம் ஆகும்.

எனவே மத்திய, மாநில அரசுகள் இதனை கவனத்தில் கொண்டு டிரெய்லர் வாகனங்களுக்கு தவணை தொகையினை சுமார் ஓராண்டு காலத்திற்கு வட்டி இல்லாமல் நீட்டிக்க வேண்டும். மேலும் காலாண்டு வரியில் ஓராண்டு காலத்திற்கு விளக்களிக்க வேண்டும். டிரெய்லர் வாகன உரிமையாளர்களுக்கு வங்கிகளில் வாகன அடிப்படையில் குறைந்த வட்டியில் கடன் அளித்து தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். மேலும் சுங்க வரியில் இருந்து டிரெய்லர் லாரிகளுக்கு ஓராண்டு காலத்திற்கு விலக்களிக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற துறையாக இருக்கும் டிரெய்லர் வாகனங்களுக்கு ஓர் ஆண்டிற்கு சுங்கவரி கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும். இவைகளை செய்தால் மட்டுமே பல தொழிற்சாலைகள் இயங்கும் பொழுது டிரெய்லர் வாகனங்களை இயக்க இயலும். இல்லையெனில் டிரெய்லர் வாகன உரிமையாளர்கள் மற்றும் இதனை நம்பி உள்ள டிரைவர்கள், கிளினர்கள் மற்றும் தொழிலாளர்கள் என லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பினை இழக்க நேரிடும் என்று அவர் கூறினார்.

மேலும் செய்திகள்