கோவை அருகே பரிதாபம்: காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி

கோவை அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2020-05-02 22:25 GMT
துடியலூர்,

கோவை சின்ன தடாகம் அருகில் உள்ள 24 வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை வால்குட்டை காப்புக்காடு அருகே தனியார் நிலத்தில் விறகு சேகரிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது புதர் மறைவில் காட்டு யானை ஒன்று நின்று கொண்டிருந்தது.

அதிகாலை நேரம் என்பதால் அய்யாசாமிக்கு, காட்டு யானை நிற்பது தெரியவில்லை. அவர் காய்ந்த விறகுகளை சேகரிப்பதில் கவனம் செலுத்தினார். அப்போது திடீரென்று மறைவில் இருந்த வெளியே வந்த காட்டு யானை அவரை நோக்கி பிளிறியபடி வேகமாக வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யாசாமி அங்கிருந்து அலறி அடித்தப்படி ஓடினார்.

காட்டு யானை தாக்கியது

ஆனால் அதற்குள் காட்டு யானை அவரை தாக்கியதுடன், தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிறிது நேரத்தில் அந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் மற்றும் தடாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் அய்யாசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்காணிக்க வேண்டும்

வனத்துறையினர் காட்டு யானை தாக்கி இறந்த அய்யாசாமி குடும்பத்திற்கு உடனடி நிவாரண தொகையான ரூ.50 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- தடாகம் பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை அட்டகாசம் குறைந்து காணப்பட்டது.

தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து உள்ளது. இந்த நிலையில் காட்டு யானை மீண்டும் குடியிருப்பு பகுதியில் நடமாட தொடங்கி உள்ளன. எனவே வனத்துறையினர் காட்டு யானை நடமாட்டத்தை கண்காணித்து, அதனை வனப்பகுதிகளுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்