அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடப்பணி சம்பளம் கொடுக்காததால் வட மாநில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை முகப்பேர் அருகே சம்பளம் வழங்காததால் தாங்கள் வேலை செய்யும் அடுக்குமாடி கட்டிடம் முன்பு வடமாநில தொழிலாளர்கள் நேற்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-05-02 22:39 GMT
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்து கட்டிடப்பணிகள் மற்றும் இதரப்பணிகள் மேற்கொண்டு வரும் கூலித் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

சென்னை முகப்பேர் அருகே தனியார் அடுக்குமாடி வீடுகள் கட்டும் பணியில் வடமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 100 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் தாங்கள் கட்டும் கட்டிடத்தின் அருகே உள்ள குடோனில் தங்கி இருக்கின்றனர். இவர்களுக்கு சம்பளம் வழங்காததால் தாங்கள் வேலை செய்யும் கட்டிடத்தின் முன்பு நேற்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து கட்டிடத் தொழிலாளிகள் கூறியதாவது:-

பீகார், ஜார்கண்ட், ஒடிசா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாங்கள் இங்கு வந்து கட்டிடப்பணிகளை செய்து வருகிறோம். நாங்கள் அயப்பாக்கத்தில் உள்ள குடோனில் தங்க வைக்கப்பட்டு உள்ளோம். எங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளத்தை மார்ச் 22-ந் தேதி தந்தனர். ஆனால், மார்ச் மாதத்துக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை.

பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் நாங்கள் இங்கு வந்து வேலை செய்து வருகிறோம். இவர்கள் மார்ச் மாத சம்பளத்தை தந்தால் தான் நாங்கள் சொந்த ஊரில் உள்ள எங்கள் குடும்பத்தினருக்கு பணம் அனுப்பி வைக்க முடியும். தற்போது நாங்கள் இங்கு சாப்பாட்டுக்கே மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எங்களுக்கு சம்பளம் தராவிட்டால் எங்களது போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்