ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் வர தடை: நோணாங்குப்பம் படகு குழாமுக்கு பல கோடி வருவாய் இழப்பு

ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட நோணாங்குப்பம் படகு குழாமுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-05-02 23:54 GMT
அரியாங்குப்பம்,

சின்னஞ்சிறிய மாநிலமான புதுவை சிறந்த சுற்றுலாத்தலமாக விளக்குகிறது. இங்கு அரவிந்தர் ஆசிரமம், கடற்கரை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம், பாரடைஸ் பீச், ஊசுடு ஏரி ஆகியவை முக்கிய சுற்றுலா இடங்களாக உள்ளது.

இதனை பார்வையிட ஆண்டு முழுவதும் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் உள்பட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வார விடுமுறை நாட்கள், பண்டிகை கால விடுமுறைகள், கோடை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும்.

படகு குழாம்

புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக நோணாங்குப்பம் படகு குழாம், பாரடைஸ் பீச் உள்ளது. இங்கு ஸ்பீடு படகு, மாடி படகு உள்பட சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 20-க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படுகின்றன. நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் இருந்து இந்த படகுகள் முகத்துவாரத்தில் உள்ள பாரடைஸ் பீச்சுக்கு சென்று சுற்றுலா பயணிகளை இறக்கிவிடும். அங்கு சுற்றுலா பயணிகள் கடலில் குளித்து ஆனந்தமாக பொழுதை கழிப்பார்கள்.

சுற்றுலா பயணிகளின் வருகையால் வழக்கமான நாட்களில் ஆயிரக்கணக்கிலும், வார விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கிலும் படகு குழாமுக்கு வருமானம் கிடைக்கும்.

வருவாய் இழப்பு

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் நோணாங்குப்பம் படகு குழாம் மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக படகுகள் சுண்ணாம்பாறு கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து 40 நாட்களுக்கும் மேலாக படகு குழாம் மூடப்பட்டுள்ளதால், கோடி கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்