தாம்பரம், பல்லாவரம் தாலுகாக்களில் தனித்தனி கடைகள் மட்டும் இயங்க அனுமதி - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் பேட்டி

தாம்பரம், பல்லாவரம் தாலுகாக்களில் தனித்தனி கடைகள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் தெரிவித்தார்.

Update: 2020-05-03 22:45 GMT
தாம்பரம், 

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய பகுதி, செம்பாக்கம் அம்மா உணவகம், முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம், வண்டலூரை அடுத்த காரணைபுதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் ஆய்வு செய்தார். தாம்பரம் முடிச்சூர் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர், அந்த பகுதியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அந்த பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் சூரண பொட்டலங்களை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது தாம்பரம் கோட்டாட்சியர் ராஜ்குமார், மாவட்ட திட்ட இயக்குனர் ஸ்ரீதர், தாம்பரம் தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலைச்செல்வன், ஊராட்சி அலுவலர் வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் நிருபர்களிடம் கலெக்டர் ஜான் லூயிஸ் கூறியதாவது:

தனித்தனி கடைகள் இயங்க அனுமதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக் கப்பட்டவர்கள் வசித்த பகுதிகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கிறது. அங்கு எந்த தளர்வும் இல்லை. தாம்பரம், பல்லாவரம் தாலுகாக்களில், சென்னை மாநகர போலீஸ் எல்லையில் உள்ள பகுதிகளில் தனித்தனி கடைகள் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிக மக்கள் கூடும் வணிக வளாகங்கள், மார்க்கெட் பகுதி கடைகள் இயங்க அனுமதி இல்லை. திறந்தவெளி மைதானங்களில் மாற்றப்பட்டுள்ள மார்க்கெட் பகுதி தொடர்ந்து இயங்கும்.

வழக்கமான ஊரடங்கு தொடர்ந்து நீடிக்கிறது. பொதுமக்கள் அதிக அளவு வெளியே வரவேண்டாம். வீட்டுக்கு ஒருவர் வந்து தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருளை வாங்கி செல்லலாம். கண்டிப்பாக அனைவரும் முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

மெப்ஸ்

தாம்பரம் சானடோரியத்தில் உள்ள மெப்ஸ் ஏற்றுமதி வளாகத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நிபந்தனையுடன் அங்குள்ள நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படும்.

பொது போக்குவரத்து கிடையாது என்பதால் அந்தந்த நிறுவனங்களே பணியாளர்களை வரவழைக்க போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதுதொடர்பாக சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஆய்வு நடத்தி அனுமதி அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்