முயல்களை வேட்டையாடி டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட மாணவர்கள் ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்து வன அதிகாரிகள் நடவடிக்கை

பட்டுக்கோட்டை அருகே முயல்களை வேட்டையாடி டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட பள்ளி மாணவர்கள் 6 பேருக்கு வன அதிகாரிகள் ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Update: 2020-05-03 22:38 GMT
பட்டுக்கோட்டை,

பட்டுக்கோட்டை அருகே முயல்களை வேட்டையாடி டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட பள்ளி மாணவர்கள் 6 பேருக்கு வன அதிகாரிகள் ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

முயல் வேட்டை

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுப்புளிக்காடு கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் 6 பேர், அங்கு உள்ள வனப்பகுதியில் வலை விரித்து காட்டு முயல்களை வேட்டையாடி உள்ளனர்.

பின்னர் அங்குள்ள வயலில் முயல்களை சமைத்து விருந்து நடத்தி உள்ளனர். தாங்கள் செய்த தவறை உணராத அவர்கள், விருந்து சாப்பிட்டதை வீடியோ எடுத்து ‘டிக்-டாக்’ செயலியில் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

அபராதம் விதிப்பு

இதுபற்றி தகவல் அறிந்த பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் இக்பால், வனவர் ராமதாஸ் மற்றும் வனத்துறை அதிகாரிகள் டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்ட மாணவர்கள் யார்? யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் 6 பேரும் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் என்பது தெரிய வந்தது.

அவர்கள் 6 பேரையும் வன அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது 6 பேரும் தங்கள் தவறை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து மாவட்ட வன அதிகாரி குருசாமி உத்தரவின் பேரில் பிடிபட்ட 6 பேருக்கும் தலா ரூ.15 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் குருசாமி கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

பட்டுக்கோட்டை அருகே முயல் வேட்டையில் சிக்கிய 6 பேரும் பள்ளி மாணவர்கள் என்பதாலும், அவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதாலும் அபராதம் விதித்து விடுவிக்கப்பட்டனர். கொரோனா ஊரடங்கு சமயத்தில் பலரும் விளையாட்டாக வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இது சட்டப்படி குற்றமாகும். இதில் ஈடுபடுவோர் அபராதம், சிறை தண்டனை ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும். மான், காட்டுப்பன்றி, அணில், உடும்பு, கிளி, கொக்கு என சிறிய, பெரிய விலங்குகள், பறவைகள் எதையும் வேட்டையாடுவது சட்டப்படி குற்ற நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும். வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது இனி வரும் காலங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்