வெளியிடங்களுக்கு சென்று கூடலூருக்கு திரும்பிய 78 லாரி டிரைவர்களுக்கு மருத்துவ பரிசோதனை

வெளியிடங்களுக்கு சென்று கூடலூருக்கு திரும்பிய 78 லாரி டிரைவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

Update: 2020-05-03 23:03 GMT
கூடலூர்,

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு அத்தியாவசிய பொருட்களை லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்களில் டிரைவர்கள் கொண்டு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் கேரளா மற்றும் கர்நாடகா மாநில எல்லையில் கூடலூர் பகுதி உள்ளது. இங்கிருந்து டிரைவர்கள் அத்தியாவசிய பொருட்களை கேரளா, கர்நாடகா மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அவர்களை அடையாளம் கண்டு மருத்துவ பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்தது.

மருத்துவ பரிசோதனை

அதன்படி நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கூடலூரை சேர்ந்த 78 டிரைவர்கள் வெளியிடங்களுக்கு சென்று திரும்பியது தெரியவந்தது. அவர்களுக்கு கூடலூர் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மருத்துவ முகாம் நடந்தது. அதில் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டு டிரைவர்கள் மற்றும் கிளனர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். மேலும் ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் கலந்துகொண்டவர்களில் 3 டிரைவர்கள் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை வீடுகளில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்