கொரோனா சிகிச்சையில் எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள தமிழக அரசு தயார் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

கொரோனா சிகிச்சையில், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2020-05-04 05:25 GMT
புதுக்கோட்டை, 

கொரோனா சிகிச்சையில், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டையில், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கபசுர குடிநீர்

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் ஆகியவை வினியோகிக்கப்படுகிறது. சென்னையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில், 1½ லட்சம் பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் பணிகள், நோயாளிகளை பராமரித்தல், அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவுகளை மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ஒரே மாதிரியான உணவு கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் வரையறுக்கப்பட்ட ஆரோக்கியமான உணவு கொடுக்கப்படுவது சிறப்பாக உள்ளதாக மத்திய குழுவினர் பாராட்டி உள்ளனர். மேலும், தமிழகத்தில் மருத்துவ மேலாண்மை சிறப்பாக உள்ளதாகவும் அவர்கள் பாராட்டி உள்ளனர்.

படுக்கை வசதிகள்

கொரோனா சிகிச்சைக்காக தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 29 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 4 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 55 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள் உள்ளன.

இன்னும் எவ்வளவு பேரை வேண்டுமானாலும் அனுமதிக்கக்கூடிய வகையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் வசதி உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் இதேபோல வசதிகள் உள்ளது. இருப்பினும் மையங்களை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறோம். எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளக்கூடிய அளவிற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. மருத்துவமனைகளில் உபகரணங்கள், மருந்துகள், முக கவசங்கள் உள்ளிட்டவை தேவையான அளவு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்