நத்தம் அருகே பயங்கரம்: தேர்தல் முன்விரோதத்தில் விவசாயி குத்திக்கொலை பெண் உள்பட 5 பேர் கைது

நத்தம் அருகே தேர்தல் முன் விரோதத்தில் விவசாயி குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர் பாக பெண் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-05-04 23:39 GMT
செந்துறை,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செங்குளம் பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் மாரிமுத்து (வயது 30). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (40). இவர்களுக்கிடையே பாதை பிரச்சினை மற்றும் உள்ளாட்சி தேர்தல் காரணமாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 2 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கருப்பையா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது உறவினர்களுடன் சேர்ந்து மாரிமுத்துவை சரமாரியாக குத்தினார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

கத்திக்குத்தில் படுகாயமடைந்த மாரிமுத்துவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக் காக நத்தம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

5 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கருப்பையா மற்றும் அவருடைய உறவினர்கள் சிவக்குமார் (40), முத்துலட்சுமி (60), பூசாரி குமார் (41), 16 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட மாரிமுத்துவுக்கு உமையாள் என்ற மனைவி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்