தேனி மாவட்டத்தில் வங்கிகள் முன்பு திரண்ட மக்கள் திறக்கப்படாததால் ஏமாற்றம்

தேனி மாவட்டத்தில் வங்கிகள் முன்பு திரண்ட மக்கள் திறக்கப்படாததால் ஏமாற்றம்.

Update: 2020-05-04 23:47 GMT
தேனி,

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு மண்டலங்களில் எவ்வித தளர்வும் அளிக்கப்படவில்லை. இதனால், வங்கிகளும் நேற்று செயல்படவில்லை. சில வங்கிகளில் கதவுகளை பாதியளவில் திறந்து வைத்து பரிவர்த்தனை பணிகளை தவிர்த்து சில வங்கி நடைமுறை பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டனர். வங்கிகள் திறக்கப்பட்டு இருக்கலாம் என்ற நம்பிக்கையில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வங்கிகள் முன்பும் மக்கள் நேற்று திரண்டனர்.

தேனி நகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முன்பும் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். வங்கிகள் முன்பு பரிவர்த்தனை செய்வதற்காகவும், நகைக்கடன், பயிர்க்கடன் பெறுவதற்காகவும் காலை 9 மணியில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் முண்டியடித்துக் கொண்டு வரிசையில் நின்றனர். காலை 10 மணியளவில் வங்கிக்கு வந்த ஓரிரு ஊழியர்களும் வங்கி செயல்படாது என்று தெரிவித்தனர். இதனால், மக்கள் ஒரு மணி நேரமாக காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வங்கிகள் திறக்கப்படாததால் காலையிலேயே வந்து நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

மேலும் செய்திகள்