கொரோனா ஊரடங்கால் செடியில் காய்ந்த பூக்களால் வாடிய விவசாயிகள்

கொரோனா ஊரடங்கால் செடிகளிலேயே பூக்கள் காய்ந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் முகம் வாடி உள்ளனர்.

Update: 2020-05-06 02:17 GMT
மானூர், 

கொரோனா ஊரடங்கால் செடிகளிலேயே பூக்கள் காய்ந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் முகம் வாடி உள்ளனர்.

பூக்கள் சாகுபடி

நெல்லை மாவட்டம் மானூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மாவடி, மதவக்குறிச்சி, ரஸ்தா, வெங்கலப்பொட்டல், நாஞ்சான்குளம், எட்டான்குளம், குப்பனாபுரம், பள்ளமடை, பிள்ளையார்குளம் போன்ற கிராமங்களில் பிரதானமாக விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு கிணற்று பாசனம் மூலம் புஞ்சை நிலங்களில் விவசாயிகள் பெரும்பாலும் பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். குறைவான தண்ணீர் பாசனத்தில், மணம் வீசும் மல்லிகை, மனம் கவரும் கேந்தி, வாடாமல்லி, சேவல் கொண்டை போன்ற பூக்கள் விளைவிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு அதுவே வாழ்வாதாரமாக திகழ்கிறது.

பலதரப்பட்ட பூச்செடிகளை விலை கொடுத்து வாங்கி, நடவு செய்து, களை எடுத்து, உரமிட்டு, பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளித்து பராமரித்து வளர்த்து தற்போது அறுவடை செய்து நன்றாக பலனடையும் நேரம் இது.

தோட்டங்களில் கேந்தி உள்ளிட்ட பூக்கள் பூத்துக்குலுங்கும் இந்த நேரத்தில் கொரோனா ஊரடங்கால் பூ விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் பேரிடி விழுந்து விட்டது.

நஷ்டம்

ஊரடங்கால் ஏப்ரல், மே மாதம் நடைபெறும் கோவில் விழாக்கள் ரத்தாகி விட்டன. திருமணம், புதுமனை புகுவிழா, பிறந்தநாள் விழாக்கள் போன்றவை மட்டுமல்ல, அரசியல் விழாக்கள் கூட நடப்பது இல்லை. சிறிய கோவில்களில் வழிபாடு, இறப்பு நிகழ்ச்சி உள்ளிட்டவற்றுக்கு பூக்களை மலர் மாலையாக கட்டிக் கொடுக்கும் சிறிய பூக்கடைகள் கூட திறக்கப்படவில்லை. பூக்களை பறித்து வாகனங்களில் கொண்டு செல்ல முடிவது இல்லை.

இதுபோன்ற காரணங்களால் பூக்களை சந்தைப்படுத்த முடியவில்லை. இதனால் விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடிகளிலேயே விட்டு உள்ளனர். இதனால் அவை செடிகளிலேயே காய்ந்து விடுகின்றன. அதை பார்த்து விவசாயிகள் முகம் வாடி போய் உள்ளனர். ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து, அந்த பணத்தைகூட பெற முடியாமல் நஷ்டம் அடைந்து உள்ளனர். சில விவசாயிகள் வாங்கிய கடனை எப்படி திருப்பி செலுத்துவது என்று கண்ணீர் வடிக்கின்றனர். எனவே, அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்