முழு ஊரடங்கால் ஆலங்குளம் வெறிச்சோடியது: கடைகள் அடைப்பு; மக்கள் நடமாட்டம் இல்லை

முழுஊரடங்கால் ஆலங்குளம் வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லை.

Update: 2020-05-06 22:45 GMT
ஆலங்குளம், 

நாமக்கல்லை சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் ஆலங்குளத்துக்கு வந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆலங்குளம் பேரூராட்சி பகுதியில் நேற்றும், இன்றும் (வியாழக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கடைகள் அடைப்பு

அதன்படி, நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, தென்காசி- நெல்லை சாலை, அம்பை சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. மருந்து கடைகள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள் திறந்து இருந்தன.

அத்தியாவசிய பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன.

காய்கறி மார்க்கெட்

விவசாயிகளின் நலன் கருதி ஆலங்குளம் தையல் நாயகி காய்கறி மார்க்கெட் வழக்கம் போல் செயல்பட்டது. அங்குள்ள காய்கறி கடைகள் மட்டும் திறந்து இருந்தன. பலசரக்கு கடைகள் மூடப்பட்டன.

இன்றும் (வியாழக்கிழமை) ஆலங்குளம் பகுதியில் முழுஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்