திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 3 மண்டலங்களாக பிரிப்பு - பச்சை மண்டலத்தில் 7 ஒன்றியங்கள்

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்த பகுதி சிவப்பு உள்ளிட்ட 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. உடுமலை உள்ளிட்ட 7 ஒன்றியங்கள் பச்சை மண்டலத்தில் இடம் பெற்றன.

Update: 2020-05-06 23:45 GMT
திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 114 பேர் கொரோனால் பாதிக்கப்பட்டு அதில் 112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் கோவை இ.எஸ்.ஐ.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்தநிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக மாவட்டம் வாரியாக சிவப்பு மண்டலத்தில் திருப்பூர் உள்ளது. ஊரடங்கு தளர்வு திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரங்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி கொரோனா தொற்று ஏற்பட்டு 14 நாட்களுக்குள் இருந்தால் அந்த பகுதி சிவப்பு மண்டலமாகவும், கொரோனா தொற்று ஏற்பட்டு 14 நாட்கள் கழிந்து விட்டால் அந்த பகுதி ஆரஞ்சு மண்டலமாகவும், கொரோனா தொற்று ஏற்பட்டு 28 நாட்கள் கழிந்து விட்டால் அந்த பகுதி பச்சை மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருப்பூர் மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதி மற்றும் உடுமலை நகராட்சி பகுதி ஆகிய 3 பகுதிகள் மட்டும் சிவப்பு மண்டலத்தில் இடம்பெற்றுள்ளன. அவினாசி, பல்லடம், பொங்கலூர், காங்கேயம், தாராபுரம் ஆகியவை ஆரஞ்சு மண்டலத்தில் இடம்பெற்றுள்ளன. மீதம் உள்ள ஊத்துக்குளி, குண்டடம், வெள்ளகோவில், மூலனூர், குடிமங்கலம், மடத்துக்குளம், உடுமலை ஒன்றியம் ஆகியவை பச்சை மண்டலத்தில் இடம்பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்