ஊரடங்கு தடையை மீறி செயல்பட்ட 10 சலூன் கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு: குமாரபாளையம் வருவாய்த்துறையினர் நடவடிக்கை

ஊரடங்கு தடையை மீறி செயல்பட்டதாக 10 சலூன் கடைகளுக்கு, குமாரபாளையம் வருவாய்த்துறையினர் சீல்’ வைத்தனர்.

Update: 2020-05-06 22:30 GMT
குமாரபாளையம், 

கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிற்குள்ளேயே தனித்து இருக்குமாறு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு சமீபத்தில் தளர்த்தப்பட்டு காய்கறி, மளிகை கடைகள் தவிர்த்து மேலும் சில கடைகள் நேரக்கட்டுப்பாட்டுடன் திறக்க அரசு அனுமதி அளித்தது. இருப்பினும் சலூன் கடைகள் மூலம் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் அந்த கடைகளை திறக்க அரசு அனுமதி அளிக்கவில்லை.

இந்த நிலையில் குமாரபாளையம் தாலுகாவில் ஊரடங்கு தடையை மீறி, சலூன் கடைகளை திறந்து சலூன் கடைக்காரர்கள் பணிபுரிந்து வந்தது குறித்து வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் குமாரபாளையம் வருவாய்த்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்தனர். அப்போது குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் ஒரு சில சலூன் கடைகள் செயல்பட்டு வந்ததை அறிந்தனர். குறிப்பாக தட்டாங்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்த 10 சலூன் கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். வருவாய்த்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகளின் இந்த திடீர் நடவடிக்கையால் குமாரபாளையம், பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மேலும் செய்திகள்