தூய்மை பணியாளர்களுக்கு வாழைப்பழம்: மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் வழங்கினார்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தூய்மை பணியாளர்களுக்கு சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் வாழைப் பழத்தை வழங்கினார்.

Update: 2020-05-06 22:45 GMT
சேலம், 

சேலம் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் வாழைப்பழம், சத்து மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு ஆணையாளர் சதீஷ் தலைமை தாங்கி தூய்மை பணியாளர்களுக்கு பழம் மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் நிரந்தரம் மற்றும் சுய உதவிக்குழு என மொத்தம் 2,111 தூய்மை பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு கொரோனா தொற்று நோய் தடுப்புக்காக வாரத்திற்கு 2 முறை மருத்துவ பரிசோதனை செய்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து பணியாளர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் வகையில் நிலவேம்பு, கபசுர குடிநீர், வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. 1,063 சுய உதவிக்குழு தூய்மை பணியாளர்களுக்கு நீல நிற சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. 1,048 நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு விரைவில் பச்சை நிற புதிய சீருடைகள் வழங்கப்படும். தூய்மை பணியாளர்களுக்கு ரூ.37 லட்சத்தில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் தூய்மை பணியாளர்களுக்கு உணவுடன் வாழைப்பழம் மற்றும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்