கடலூர் மாவட்டத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதி பாதிப்பு எண்ணிக்கை 324 ஆக உயர்ந்தது

கடலூர் மாவட்டத்தில் மேலும் 95 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-05-06 22:11 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்களால் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வந்தவர்களால் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை 229 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதில் கோயம்பேட்டில் இருந்து வந்த 129 பேருக்கு பாதிப்பு இருந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரையும் சிதம்பரம், விருத்தாசலம், கடலூர், திட்டக்குடி அரசு மருத்துவமனைகளில் அனுமதித்து சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

95 பேருக்கு உறுதி

இந்நிலையில் நேற்று 95 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது. இதில் கோயம்பேடு சென்று வந்தவர்கள், சிதம்பரம் செவிலியர்கள், கடலூர் முதுநகர் பகுதியில் வசித்து வரும் சென்னை ஆயுதப்படை போலீஸ்காரரின் தந்தை உள்பட மேலும் சிலர் அடங்குவர் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது.

1,877 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

இதுதவிர கொரோனா அறிகுறியுள்ள 261 பேர் அரசு மருத்துவமனைகளிலும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர பாதிக்கப்பட்ட 257 பேரின் தொடர்பில் இருந்த 1,877 பேரும் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்