ஊரடங்கு தளர்வு எதிரொலி: பாண்டிபஜாரில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன - மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர்

ஊரடங்கு உத்தரவில் தளர்வு செய்யப்பட்டதின் எதிரொலியாக சென்னை பாண்டிபஜாரில் பெரும்பாலான கடைகள் நேற்று திறக்கப்பட்டன. மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்கள் வாங்கி சென்றனர்.

Update: 2020-05-06 22:45 GMT
சென்னை,

கொரோனா பீதி காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு ஓரளவு தளர்த்தி இருக்கிறது.

அதன்படி, நீண்ட நாட்களுக்கு பிறகு ஊரடங்கில் அரசு அறிவித்த தளர்வுகள் கடந்த 4-ந் தேதி முதல் அமலானது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன.

சென்னை பாண்டிபஜாரில் நேற்று பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. ஓட்டல்கள், செல்போன் கடைகள், துணிக்கடைகள், அலங்கார பொருட்கள் விற்பனை கடைகள், கைப்பை, நாகரிக அணிகலன்கள் விற்பனையகங்கள், பேன்சி கடைகள், விளையாட்டு பொம்மைகள் விற்பனையகங்கள், பேக் கடைகள், கூலிங் கிளாஸ் விற்பனை கடைகள் என பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டிருந்தன.

அதேவேளை பெரிய பெரிய கட்டிடங்களில் செயல்படும் கடைகள் பெரும்பாலானவை திறக்கப்படவில்லை. சாலையோர கடைகளில் 80 சதவீத கடைகள் திறந்திருந்தது. அதேபோல புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட வணிக பகுதிகளிலும் நேற்று ஓரளவு கடைகள் திறந்து இருந்தன.

திறந்திருந்த கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரிசையில் காத்திருந்து பொருட்கள் வாங்கி சென்றனர். அதேபோல ‘முக கவசங்கள் அணியாமல் கடைக்கு வரவேண்டாம்’ என்றும் பல கடைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன.

வீட்டு உபயோக பொருட்கள்

சென்னை தியாகராயநகர் உஸ்மான் சாலையில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் ‘வசந்த் அன் கோ’ ஷோரூம் திறக்கப்பட்டு இருந்தது. இதில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து மக்கள் வரிசையில் காத்திருந்து வீட்டு உபயோக பொருட்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

இதுகுறித்து ‘வசந்த் அன் கோ’ உரிமையாளர் எச்.வசந்தகுமார் எம்.பி. கூறுகையில், “தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, பெங்களூருவில் உள்ள வசந்த் அன் கோ ஷோரூம்கள் 86 எண்ணிக்கையில் உள்ளன. இதில் நேற்று 40 ஷோரூம்கள் திறக்கப்பட்டன. மக்களும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி சென்றனர்” என்றார்.

இதேபோல உஸ்மான் சாலையில் திறந்திருந்த ஒரு சில கடைகளிலும் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொருட்கள் வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்