ஊரடங்கு நேரத்தில் குழந்தையின் உயிர்காக்க மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்த கலெக்டர் பெற்றோர், கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்

ஊரடங்கு நேரத்தில், குழந்தையின் உயிர்காக்க மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்த கலெக்டர் கோவிந்தராவுக்கு குழந்தையின் பெற்றோர், கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

Update: 2020-05-06 22:46 GMT
திருச்சிற்றம்பலம், 

ஊரடங்கு நேரத்தில், குழந்தையின் உயிர்காக்க மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்த கலெக்டர் கோவிந்தராவுக்கு குழந்தையின் பெற்றோர், கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

திருச்சிற்றம்பலம் அருகே நடந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

2½ வயது குழந்தை

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள சித்துக்காடு கிராமம் கணக்கன் தெருவை சேர்ந்தவர் முருகேசன். சரக்கு ஆட்டோ டிரைவரான இவரது மனைவி வினிதா. இவர்களது 2½ வயது குழந்தை யோகித், ‘தலைசிமியா’ என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோய்க்காக குழந்தை யோகித், மருந்து மாத்திரைகளால் தொடர் சிகிச்சை பெற்று வந்தது.

இந்த நிலையில் குழந்தைக்கு வழங்க வேண்டிய மருந்து, மாத்திரைகள் வேறு எங்கும் கிடைக்காததால், சென்னை எழும்பூரில் உள்ள ஒரு குழந்தைகள் மருத்துவமனையில் மட்டுமே வாங்கி கொடுக்கப்பட்டு வந்தது.

கலெக்டர் ஏற்பாடு

இந்த நிலையில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் சென்னைக்கு சென்று மருந்து, மாத்திரைகள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தனது குழந்தைக்கு மருந்து, மாத்திரைகள் வாங்க முடியவில்லையே என்று முருகேசன் தம்பதியினர் மிகுந்த வேதனை அடைந்தனர். இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டரின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ், இதுகுறித்து மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு துணை இயக்குனர் முகமது கமாலை தொடர்பு கொண்டு முருகேசனின் குழந்தைக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் கிடைக்க உடனடியாக ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டார்.

கண்ணீர் மல்க நன்றி

இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க தொழில் நலவாரிய தலைவர் பட்டுக்கோட்டை சோலைசிவம் உதவியுடன், சென்னையில் இருந்து குழந்தை யோகித்துக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் உடனடியாக வரவழைக்கப்பட்டது. பின்னர் அந்த மருந்து, மாத்திரைகளை சித்துக்காட்டில் உள்ள யோகித்தின் பெற்றோரிடம் இலவசமாக வழங்கப்பட்டது. தங்களது குழந்தைக்கு தேவையான உயிர்காக்கும் மருந்தினை உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுத்த தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு முருகேசன் தம்பதியினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்