யெஸ் வங்கி முறைகேடு வழக்கு: ராணா கபூர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

யெஸ் வங்கி முறைகேடு தொடர்பாக அதன் நிறுவனர் ராணா கபூர் மீது அமலாக்கத்துறை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

Update: 2020-05-06 23:00 GMT
மும்பை,

மும்பையை தலைமையிடமாக கொண்டு 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளுடன் நாட்டின் 5-வது பெரிய தனியார் வங்கியாக உருவெடுத்த யெஸ் வங்கி வாராக்கடன் பிரச்சினையில் சிக்கியது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் ரிசர்வ் வங்கி யெஸ் வங்கியின் செயல்பாட்டை முடக்கியது.

சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த வங்கி நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்தது.

குற்றப்பத்திரிகை தாக்கல்

ராணா கபூர், அவரது மனைவி மற்றும் 3 மகள்கள் நிர்வகித்து வரும் நிறுவனத்துக்கு ரூ.600 கோடியை திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் வழங்கி முறைகேடு நடந்திருப்பது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் கடனை திருப்பி செலுத்த தகுதியில்லாத பல நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதில் ராணா கபூர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ரூ.4,300 கோடி அளவுக்கு பயன் அடைந்ததாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

இந்தநிலையில், ராணா கபூர் மீது நேற்று அமலாக்கத்துறை மும்பை சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

மேலும் செய்திகள்