மது பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசு: கர்நாடகத்தில் மதுபானம் விலை ‘திடீர்’ உயர்வு - இன்று முதல் அமலுக்கு வருகிறது

கர்நாடகத்தில் மதுபானம் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று(வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

Update: 2020-05-06 23:45 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் கடந்த 4-ந் தேதி 40 நாட்களுக்கு பிறகு மதுபான கடைகள் திறக்கப்பட்டன. முதல் நாளில் மது பிரியர்கள் போட்டி போட்டு தங்களுக்கு பிடித்த மதுபானங்களை வாங்கி சென்றனர். ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று கூறும் அளவுக்கு பெண்களும் வரிசையில் வந்து மதுபானங்களை வாங்கினர். சில கடைகளின் முன்பு பெண்களுக்கு தனி வரிசை ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனாவால் எழுந்துள்ள நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ள வசதியாக டெல்லியை போல், கர்நாடகத்திலும் மதுபானம் மீது 6 சதவீதம் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கலால் வரி உயர்வு நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது.

25 சதவீதம் உயர்வு

இந்த நிலையில் மது பிரியர்களுக்கு மீண்டும் அதிர்ச்சியை கொடுத்துள்ள கர்நாடக அரசு, மதுபானங்கள் மீதான கலால் வரியை கூடுதலாக 17, 21, 25 என்ற விகிதத்தில் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. அதாவது ரூ.559 வரையிலான மதுபானங்கள் மீது 17 சதவீதமும், ரூ.600 முதல் ரூ.1,199 வரையிலான மதுபானம் மீது 21 சதவீதமும், ரூ.1,200 முதல் ரூ.15 ஆயிரம் வரை உள்ள மதுபானம் மீது 25 சதவீதமும் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வரி உயர்வு இன்று(வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மதுபானங்களின் விலை கணிசமாக உயருகிறது. இனி மது பிரியர்கள், கூடுதல் விலை கொடுத்து மதுபானம் வாங்க வேண்டும்.

மேலும் செய்திகள்