அரிசி குறைவாக வழங்கப்பட்டதாக கூறி ரேஷன்கடை முன் பொதுமக்கள் திடீர் போராட்டம்

அரிசி குறைவாக வழங்கப்பட்டதாகக் கூறி பள்ளிவிளை ரேஷன் கடை முன் பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-05-07 01:45 GMT
நாகர்கோவில், 

அரிசி குறைவாக வழங்கப்பட்டதாகக் கூறி பள்ளிவிளை ரேஷன் கடை முன் பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ரேஷன் பொருட்கள்

தமிழகம் முழுவதும் ஊரடங்கு பாதிப்பையொட்டி கடந்த ஏப்ரல் மாதம் ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. எனினும் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டதால் மே மாதத்திற்கான ரேஷன் பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ரேஷன் பொருட்கள் வினியோகம் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வருகிறார்கள்.

கூடுதல் அரிசி

குமரி மாவட்டத்தில் 5 லட்சத்து 43 ஆயிரத்து 246 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அரிசி, சீனி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே ஏப்ரல் முதல் ஜூன் வரை 3 மாதங்களுக்கு ரேஷன் கார்டில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் கூடுதலாக தலா 5 கிலோ அரிசியை இலவசமாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இவற்றின் வினியோகமும் நடைபெற்று வருகிறது.

மக்கள் அதிர்ச்சி

நாகர்கோவில் அருகே பள்ளிவிளை ரேஷன் கடையில் நேற்று காலை ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது. அப்போது மத்திய அரசு கூறியபடி ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், ரேஷன்கார்டு தாரர்களின் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியில் 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்பட்டு விட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களிடம் கேட்ட போது அவர்கள் சரியாக பதில் கூறவில்லை.

திடீர் போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ரேஷன் கடை முன் திடீர் போராட்டம் நடத்தினர். 100-க்கும் அதிகமானோர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. அங்கு வந்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. விடம் கூறினர். சிறிது நேரத்தில் அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அலுவலக அதிகாரிகளும் அங்கு வந்தனர். பின்னர் ரேஷன் கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரேஷன் கடையில் அரிசி போதுமான அளவு இருப்பு இருந்தது தெரியவந்தது.

பரபரப்புக்கு முடிவு

இதனையடுத்து அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்திய கூடுதல் அரிசியை வழங்கும்படி அதிகாரிகள் கூறினர். அதன் பிறகு ஒவ்வொருவருக்கும் கூடுதல் அரிசி வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வாங்கி சென்றனர். அதன்பிறகு அங்கு ஏற்பட்டிருந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்