நெல்லை அருகே நடத்தையில் சந்தேகத்தால் பயங்கரம்: தலை துண்டித்து பெண் கொடூரக்கொலை போலீசில் கணவர் சரண்

நெல்லை அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பெண் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

Update: 2020-05-07 02:14 GMT
நெல்லை, 

நெல்லை அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் பெண் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய கணவர் போலீசில் சரண் அடைந்தார்.

கட்டிட தொழிலாளி

நெல்லை அருகே உள்ள தாழையூத்தை அடுத்த குறிச்சிகுளத்தை சேர்ந்தவர் சொரிமுத்து (வயது 37). இவர் கேரளாவில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த ரம்லத் (30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் காதல் மனைவியை குறிச்சிகுளத்துக்கு அழைத்து வந்து தங்க வைத்தார்.

சொரிமுத்து அடிக்கடி கேரளாவுக்கு வேலைக்கு சென்று விடுவார். விடுமுறை கிடைக்கும்போது வீட்டுக்கு வருவார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும், 12 வயதில் இன்னொரு மகனும் உள்ளனர். கொரோனா தொற்று பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி சொரிமுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு குறிச்சிகுளத்துக்கு வந்து மனைவியுடன் தங்கியுள்ளார்.

நடத்தையில் சந்தேகம்

ரம்லத் இரவு நேரங்களில் அடிக்கடி செல்போனில் பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சொரிமுத்து, மனைவியின் நடத்தையை கண்காணித்தார். இதில் அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கருதினார். இதையடுத்து சொரிமுத்து மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

கடந்த 4-ந்தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரம்லத் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். சொரிமுத்து மனைவியை பல இடங்களில் தேடினார். அவர் எங்கு சென்றார்? என்று தெரியவில்லை. இதுகுறித்து அவர் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார், ரம்லத் மாயமானதாக வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் சொரிமுத்துவின் ஒரு மகனுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. இதை அறிந்த ரம்லத் நேற்று முன்தினம் இரவு திடீரென்று சொரிமுத்துவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மகனுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொரிமுத்து கூறினார். உடனே மகனை பார்க்க வேண்டும் என ரம்லத் கூறினார். அவர், நான் கேரளாவில் இருந்து வந்ததால், கொரோனா பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரி வந்து இருக்கிறேன். அங்கு வந்தால், 2 பேரும் சேர்ந்து வீட்டுக்கு போய் விடலாம் என சொரிமுத்து கூறினார்.

நள்ளிரவில் கொலை

அவருடைய பேச்சை நம்பி ரம்லத் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் இரவு சொரிமுத்துவுடன், ரம்லத் புறப்பட்டு வந்தார். நள்ளிரவில் தாழையூத்து குறிச்சிகுளம் பகுதி வந்தவுடன் தனது மோட்டார் சைக்கிளை சொரிமுத்து நிறுத்தினார். நான்கு வழிச்சாலை புதர் அருகே உள்ள முட்புதருக்கு தனது மனைவியை சொரிமுத்து அழைத்து சென்றார்.

அங்கு தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் மனைவியை, சொரிமுத்து சரமாரியாக வெட்டினார். பின்னர் ஆத்திரத்தில் மனைவி தலையை அறுத்து துண்டித்தார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர், துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

போலீசில் சரண்

பின்னர் சொரிமுத்து வீட்டுக்கு சென்றார். ஆனால், அவருடைய உள் மனது உறுத்தியது. இதைத்தொடந்து அவர் நேற்று காலை தாழையூத்து போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். நடந்த சம்பவத்தை போலீசாரிடம் கூறினார். தகவல் அறிந்த தாழையூத்து போலீஸ் துணை சூப்பிரண்டு பொன்னரசு, தாழையூத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கிடந்த ரம்லத் உடலை கைப்பற்றி, பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு

இந்த பயங்கர கொலை தொடர்பாக தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சொரிமுத்துவை கைது செய்தனர். தலை துண்டித்து பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்