நெல்லை அருகே பரிதாபம் கல்குவாரி நீரில் மூழ்கி சிறுவன் சாவு

நெல்லை அருகே கல்குவாரி நீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2020-05-07 02:29 GMT
பேட்டை, 

நெல்லை அருகே கல்குவாரி நீரில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

சிறுவன்

நெல்லை அருகே பேட்டை நரசிங்கநல்லூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் செல்வகணேஷ் (வயது 25). பந்தல் அமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி மகாலட்சுமி (23). இவர்களுக்கு முகேஷ் (5), சுகன்யா (5) என்ற இரட்டை குழந்தைகளும், சரண்யா(2) என்ற பெண் குழந்தைகளும் உள்ளனர்.

சுகன்யா, முகேஷ் ஆகிய இருவரும் அங்குள்ள பாலர் பள்ளியில் படித்து வந்தனர். இரட்டை குழந்தைகள் தினமும் தங்களது தாத்தா கோபால், பாட்டி சிவகாமியுடன் அருகே உள்ள பயன்பாட்டில் இல்லாத கல்குவாரி தண்ணீரில் குளித்து வருவது வழக்கம்.

நீரில் மூழ்கினான்

நேற்று மாலை பேரன், பேத்திகளுடன் குளிக்க சென்றுள்ளனர். தாத்தா கோபால் அப்பகுதியில் முள்வெட்ட சென்றதாக கூறப்படுகிறது. சிவகாமி துணிக்கு சோப்பு பொடி போட்டு விட்டு துணி துவைக்க ஆரம்பித்த நிலையில், குழந்தைகள் நீரில் தத்தளித்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். செய்வதறியாது திகைத்த அவர் கணவரை அழைத்துள்ளார். அங்கு வருவதற்குள் முகேஷ் நீரில் மூழ்கி விட்டான். சுகன்யா தத்தளித்தாவறே கரை ஒதுங்கினாள்.

கோபால் முடிந்த அளவிற்கு தேடி பார்த்தும் கிடைக்காததால் பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரில் மூழ்கிய சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறுவன் நீரில் மூழ்கிய சம்பவம் அறிந்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு குவிந்தனர்.

பரிதாப சாவு

சுமார் 20 நிமிட தேடுதலுக்கு பின்னர் சிறுவனை பிணமாக மீட்டனர். தகவல் அறிந்ததும் சுத்தமல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி நடராஜன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவன் பிணமாக வெளியே மீட்டதும் சுற்றி நின்றிருந்த உறவினர்கள் அனைவரும் கதறி அழுதது காண்போரின் கண்களை குளமாக்கியது. நெல்லை அருகே சிறுவன் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்