கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை கிராமங்களுக்கு அழைத்து வந்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை கிராமங்களுக்கு அழைத்து வந்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2020-05-07 06:22 GMT
செந்துறை, 

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை கிராமங்களுக்கு அழைத்து வந்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கொரோனா தொற்று

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வேலை பார்த்த தொழிலாளர்கள் ஆவார்கள். செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் வசித்த பகுதிக்கு அவர்களை அழைத்து வந்து சுகாதாரத் துறையினர் வீட்டில் விட்டு சென்றனர். இதேபோல் நல்லாம்பாளையம், உஞ்சினி, பரணம் உள்ளிட்ட கிராமங்களிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், அவரவர் வீடுகளுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து அவர்களது வீடுகளுக்கு சென்ற கிராம நிர்வாக அதிகாரி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்டோர், கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர்களை வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொண்டனர்.

பொதுமக்கள் எதிர்ப்பு

இதை அறிந்த அந்தந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர். மேலும் அவர்கள், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை, ஊருக்குள் அழைத்து வந்தது ஏன்? என்று கேட்டு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் அல்லது தனிமைப்படுத்த வேண்டும் என்று கூறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், அவரவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டதால் அந்த கிராம மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அவர்களை போலீசாரும், வருவாய்த்துறையினரும் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்