அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம்: மாற்றுத்திறனாளிகள் 245 பேர் கைது

அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் 245 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-05-07 22:30 GMT
திருப்பூர்,

கொரோனா நிவாரண உதவித்தொகையாக மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் தமிழக அரசு வழங்க வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பில் திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் குடியேறும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை சங்கத்தின் தெற்கு மாநகர பொருளாளர் சஞ்சீவன் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் வந்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் நிவாரண உதவித்தொகையாக தமிழக அரசு ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

இதைத்தொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 27 பேரை கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர்.

திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட 57 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவினாசிகவுண்டம்பாளையம்

திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த அவினாசிகவுண்டம்பாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் காளியப்பன் தலைமையிலும், அனுப்பர்பாளையத்தில் மாநகராட்சி 1-வது மண்டல அலுவலகம் முன்பு துணைத்தலைவர் வர்கீஸ் தலைமையிலும், பிச்சம்பாளையத்தில் 2-வது மண்டல அலுவலகம் முன்பு வடக்கு ஒன்றிய செயலாளர் ரோஸி தலைமையிலும், நெருப்பெரிச்சல் மாநகராட்சி வரிவசூல் மையம் முன்பு வடக்கு ஒன்றிய தலைவர் மோகன் தலைமையிலும் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் 4 இடங்களில் போராட்டத்தில் கலந்து கொண்ட 161 கைது செய்யப்பட்டு, அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று நடந்த போராட்டத்தில் மொத்தம் 245 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்