மக்களின் துயரத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

மக்களின் துயரத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை என்று காங்கிரஸ் கட்சி மாநில தலைவர்கே.எஸ்.அழகிரி கூறினார்.

Update: 2020-05-07 22:09 GMT
புவனகிரி,

கொரோனா நோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமலும், தொற்றை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யாமலும், ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் மீட்பு நடவடிக்கை மறுவாழ்வு பற்றி கவலைப்படாமலும் திடீரென மதுபான கடைகளை திறந்த தமிழக அரசை கண்டித்தும், மாநில அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்காததை கண்டித்தும் நேற்று தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில், கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையம் மெயின்ரோட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திருமாவளவன், ராதாகிருஷ்ணன், துரை பாலச்சந்தர், அருண், சேரன், பிரகாசம், சேகர் உள்பட பலர் கருப்பு சின்னம் அணிந்து கலந்து கொண்டனர்.

இதைதொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வஞ்சிக்கிறது

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மக்களை காப்பாற்றும் நோக்கம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி அரசு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்து விட்டுள்ளது. மக்கள் படும் துயரத்தை பற்றி தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.

கேரளாவில் எந்தவிதமான கொரோனாவும் இல்லை. ஆனால் கேரளா அரசு அங்கு டாஸ்மாக் கடைகளை திறப்பது பற்றி நினைக்கவே இல்லை. மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. மத்திய அரசு நிதி அதிகாரத்தை வைத்துக் கொண்டு மாநில அரசுகளை புறக்கணித்து வருகிறது.

கொரோனாவை ஒழிக்க போலீசார், சுகாதாரத்துறை போன்ற பணியாளர்கள் போராடி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து இருப்பதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

சில நாட்களாக பெண்கள், குடும்பத்தில் பிரச்சினை இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்து வந்தனர். மதுபிரியர்களும் குடியை விட்டு விட்டு தன்னுடைய வேலையை பார்த்து வந்தனர். 40 நாட்களுக்கு பிறகு மீண்டும் டாஸ்மாக் கடையை திறப்பது மறந்து போனவர்களுக்கு மீண்டும் குடியை கற்றுக் கொடுக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்