கொரோனா தொற்று காரணமாக அழகன்குளம் நாடார்வலசை டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி மறுப்பு

கொரோனா தொற்று காரணமாக அழகன்குளம் நாடார்வலசை டாஸ்மாக் கடையை திறக்க அனுமதி மறுக்கப்பட்டது.

Update: 2020-05-08 00:16 GMT
பனைக்குளம்,

கொரோனா ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாடுகள் உள்ள பகுதிகளை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு டாஸ்மாக் கடைகள் முன்பாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் மதுக்கடைகள் திறப்பதற்கு அதிக எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தந்த பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அழகன்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட நாடார்வலசையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையையும் திறப்பதற்காக கடையின் முன்பாக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது.

இருப்பினும் அழகன்குளத்தில் இந்து சமூக நிர்வாகிகள், முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் இந்த கடையை திறக்கக்கூடாது என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்ததன் பேரிலும், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட சோகையன்தோப்பு கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் கடை அமைந்துள்ளதாலும் இந்த டாஸ்மாக் கடையை திறக்க மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் அனுமதிக்கவில்லை. இதனால் நேற்று நாடார்வலசை டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த மதுபிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.

மேலும் செய்திகள்