முதுமலையில் பரவலாக மழை: நீர்நிலைகள் நிரம்பியதால் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது - வனத்துறையினர் தகவல்

முதுமலையில் பரவலாக மழை பெய்து வருவதால், நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. இதனால் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Update: 2020-05-07 22:00 GMT
கூடலூர்,

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் வறட்சியான காலநிலை நிலவும். அப்போது வனத்தில் புற்கள் காய்ந்தும், நீர்நிலைகள் வறண்டும் காணப்படும். இதனால் வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். மேலும் சில நேரங்களில் காட்டுத்தீ பரவி வனப்பகுதி எரிந்து நாசமாகிறது.

முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக உள்ளது. இங்கு முதுமலை, கார்குடி உள்ளிட்ட வனச்சரகங்களை தவிர மீதமுள்ள வனச்சரகங்களில் கடந்த சில வாரங்களாக கடும் வறட்சி நிலவி வந்தது. இதனால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவனம், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து காட்டுயானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன.

இந்த நிலையில் கூடலூர், முதுமலை பகுதியில் கடந்த சில நாட்களாக மாலையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் பரவலாக மழை பெய்தது. இதனால் வனப்பகுதி பசுமைக்கு திரும்புகிறது. மேலும் முதுமலை புலிகள் காப்பக வனத்துக்குள் இருக்கும் அனைத்து குளங்கள் உள்பட நீர்நிலைகள் நிரம்பி காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு தேவையான குடிநீர் வனத்துக்குள் உள்ளதா? என வனச்சரகர் ராஜேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது போதிய அளவுக்கு நீர்நிலைகளில் குடிநீர் இருப்பு உள்ளது தெரியவந்தது. இதேபோல் வனவிலங்குகளுக்கு தேவையான பசுந்தீவனமும் வளர்ந்து உள்ளது. இதுகுறித்து வனத்துறை யினர் கூறியதாவது:-

முதுமலை புலிகள் காப்பக வனத்துக்குள் சுமார் 40-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. வழக்கமாக கோடை காலத்தில் குளங்கள் வறண்டு விடும். இதனால் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் கட்டி வைக்கப்பட்டுள்ள சிமெண்டு தொட்டிகளில் வனத்துறை வாகனம் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வந்தது. தொட்டிகளை தேடி வனவிலங்குகள் வந்து தாகத்தை தணித்து வந்தது.

தற்போது கூடலூர், முதுமலை, மசினகுடி பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் முதுமலையில் உள்ள அனைத்து குளங்களும் தண்ணீரால் நிரம்பி உள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழையும் வெகுவிரைவில் பெய்ய உள்ளது. இதனால் நடப்ஆண்டில் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்