சேலம் சென்னீஸ் மைதானத்தில் செயல்பட்ட தற்காலிக உழவர் சந்தை மீண்டும் இடமாற்றம்

சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த தற்காலிக சூரமங்கலம் உழவர் சந்தை 3 ரோடு அருகே சென்னீஸ் மைதானத்திற்கு (ஜவகர் மில் திடல்) இடமாற்றம் செய்யப்பட்டது.

Update: 2020-05-08 04:40 GMT
சேலம்,

சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த தற்காலிக சூரமங்கலம் உழவர் சந்தை 3 ரோடு அருகே சென்னீஸ் மைதானத்திற்கு (ஜவகர் மில் திடல்) இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால் அங்கு திறந்த வெளியாக இருப்பதாலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததாலும் காய்கறிகள் விற்க முடியாத சூழ்நிலை இருப்பதாக விவசாயிகளும், வியாபாரிகளும் குற்றச்சாட்டு தெரிவித்தனர். மேலும் பொதுமக்களும் அங்கு சரியாக வராததால் காய்கறி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மீண்டும் புதிய பஸ் நிலையத்திற்கு சந்தையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று காய்கறி வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு காய்கறி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி சென்னீஸ் மைதானத்தில் செயல்பட்டு வந்த சூரமங்கலம் உழவர் சந்தையை மீண்டும் புதிய பஸ் நிலையத்திற்கு இடம் மாற்றம் செய்தனர். இதனால் தினமும் காலையில் அங்கு ஏராளமான பொதுமக்கள் சென்று வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை எளிதாக வாங்கி செல்கின்றனர். மேலும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும்போது பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். உழவர் சந்தை மற்றும் காய்கறி கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்கி செல்ல வேண்டும். அதை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்