எடப்பாடியில், அ.தி.மு.க. சார்பில் 15 ஆயிரம் குடும்பத்தினருக்கு விலையில்லா அரிசி முதல்-அமைச்சர் தகவல்

எடப்பாடியில், அ.தி.மு.க. சார்பில் 15 ஆயிரம் குடும்பத்தினருக்கு விலையில்லா அரிசி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Update: 2020-05-08 05:26 GMT
சேலம்,

தமிழகம் மட்டும் அல்லாது, இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் ஆகியவை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையடுத்து எடப்பாடி நகரில் வசிக்கும் ஏழை, எளிய 15 ஆயிரம் குடும்பத்தினருக்கு தலா 25 கிலோ வீதம், விலையில்லா அரிசி அ.தி.மு.க. சார்பில் வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதில் எடப்பாடி நகர்மன்ற முன்னாள் தலைவரும், நகர ஜெயலலிதா பேரவை செயலாளருமான கதிரேசன், எடப்பாடி நகர செயலாளர் முருகன் மற்றும் அந்தந்த வார்டு பகுதி செயலாளர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் வழங்கப்படும்.

ஆலிச்சாம்பாளையம் பகுதி

முதல் கட்டமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு எடப்பாடி நகரம், ஆலிச்சாம்பாளையம் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அரிசி வழங்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற பகுதி மக்களுக்கு வழங்கப்படும்.

அரிசி வழங்கும் நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க. சார்பில் 3 பேர் மட்டும் முக கவசம் அணிந்து கலந்து கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்