ஊரடங்கின்போது இயங்க அனுமதி கோரி விண்ணப்பித்த ஈரோடு தோல்-நூல் பதனிடும் ஆலைகளில் கலெக்டர் ஆய்வு

ஊரடங்கின்போது இயங்க அனுமதி கோரி விண்ணப்பித்த ஈரோடு தோல் மற்றும் நூல் பதனிடும் ஆலைகளில் கலெக்டர் சி.கதிரவன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2020-05-08 23:15 GMT
ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இதனால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறி இருக்கிறது.

பொதுமக்கள் வசதிக்காக சில தளர்வுகளை அரசு அறிவித்து இருக்கிறது.

அதன்படி சில தொழிற்கூடங்கள், கடைகள் இயங்க ஈரோடு மாவட்ட நிர்வாகம் அனுமதித்து இருக்கிறது. இந்தநிலையில் ஈரோடு மாநகர் மற்றும் ஊரக பகுதிகளில் இயங்கி வரும் சில தொழிற்சாலை உரிமையாளர்கள் ஊரடங்கு முடியும் முன்பே தொழிற்சாலைகளை இயக்க அனுமதி கோரி மாவட்ட கலெக்டர் சி.கதிரவனுக்கு விண்ணப்பித்து இருந்தனர். அவ்வாறு விண்ணப்பித்த சில தொழிற்சாலைகளில் கலெக்டர் சி.கதிரவன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு வில்லரசம்பட்டி ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் கலெக்டர் சி.கதிரவன் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ஆர்.என்.புதூரில் உள்ள தோல் தொழிற்சாலைக்கு சென்ற அவர் அங்கு உள்ள எந்திர தளவாடங்கள், தோல் பதனிடும் பகுதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுபோல் மாயவரம் பகுதியில் உள்ள நூல் பதனிடும் ஆலை, பெருமாள் மலையில் உள்ள நூல்பதனிடும் ஆலை ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் போது தொழிற்சாலை நிறுவனங்களின் செயல்பாடுகள், ஊழியர்கள் எண்ணிக்கை குறித்து கலெக்டர் கேட்டு அறிந்தார்.

பணிக்கு வரும் ஊழியர்களுக்கு செய்யப்பட்டு உள்ள வசதிகள், உணவு ஏற்பாடு மற்றும் தொழிற்சாலையில் பணியாளர்கள் வேலை செய்யும் இடத்தில் மேற்கொள்ளப்பட உள்ள கொரோனா தடுப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டு அறிந்தார். மேலும், அனைத்து நிறுவனங்கள், ஆலைகளில் தினசரி கிருமி நாசினி தெளிப்பு, தொழிற்கூட உள் வெப்பமானி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்த கேட்டுக்கொண்டார்.

ஆலைகள் செயல்பட அனுமதி பெறும் நிலையில் பணியில் இருக்கும் அனைத்து தொழிலாளர்கள் உள்பட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது ஈரோடு மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஜி.திருமுருகன், ஈரோடு தாசில்தார் ஏ.பரிமளாதேவி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்