என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: தீக்காயமடைந்த தொழிலாளி சாவு

என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து தீப் பிடித்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

Update: 2020-05-08 22:07 GMT
நெய்வேலி,

நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள அனல்மின் நிலையங்களில் ஒன்றான, இரண்டாம் அனல் மின் நிலையத்தில், உள்ள 6-வது உற்பத்தி பிரிவின் கொதிகலன் அமைப்பின் ஒரு பகுதி நேற்று முன்தினம் மாலை திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த நிரந்தர தொழிலாளர்களான பாவாடை, சர்புதீன்(வயது 54), ஒப்பந்த தொழிலாளர்கள் சண்முகம், அன்புராஜன், ஜெய்சஙக்ர், ரஞ்சித்குமார், மணிகண்டன், பாலமுருகன் ஆகியோர் பலத்த தீக்காமடைந்தனர். இவர்கள் அனைவரும் திருச்சி, காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வந்தனர்.

சாவு

இந்த நிலையில், சர்புதீன் நேற்று மாலை சிகிச்சை பலனளிக்காமல் திடீரென உயிரிழந்தார். மற்ற 7 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சர்புதீன் நெய்வேலி 29-வது வட்டத்தில் உள்ள என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வந்தவர் ஆவார். இவரது இறப்பு அவரது குடும்பத்தினர் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்து குறித்து 2-வது அனல்மின் நிலைய பொது மேலாளர் ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில், தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்