நிவாரணம் வழங்குவதாக பரவிய வதந்தியால் ஒரே இடத்தில் திரண்ட பொதுமக்கள் தஞ்சையில், பரபரப்பு

தஞ்சையில், நிவாரணம் வழங்குவதாக பரவிய வதந்தியால் பொதுமக்கள் ஒரே இடத்தில் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-05-08 22:19 GMT
தஞ்சாவூர், 

தஞ்சையில், நிவாரணம் வழங்குவதாக பரவிய வதந்தியால் பொதுமக்கள் ஒரே இடத்தில் திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்கள் திரண்டனர்

கொரோனா வைரஸ் பரவுதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.

தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள திவான் தெருவில் நேற்று முன்தினம் நிவாரணம் வழங்கப்பட்டது. நேற்றும் நிவாரணம் வழங்கப்படுவதாக அந்த பகுதி மக்களிடையே வதந்தி பரவியது. இதையடுத்து காலையிலேயே பொதுமக்கள் திவான் தெருவுக்கு செல்லும் சாலையில் திரண்டனர்.

பின்னர் அவர்கள் சமூக இடைவெளி விட்டு நிவாரணம் பெறுவதற்காக தாங்கள் கொண்டு வந்த பைகளை சாலையிலேயே வைத்தனர். சிலர் கற்களை வரிசையாக வைத்து இருந்தனர்.

பரபரப்பு

வெகுநேரமாக பொதுமக்கள் நிவாரணம் பெற காத்திருந்தனர். ஆனால் யாரும் நிவாரணம் வழங்க வரவில்லை. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசாரும் வந்தனர்.

அவர்கள் இது குறித்து நிவாரணம் வழங்கப்படுவதாக கூறப்பட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசினர். அதற்கு அவர்கள், நாங்கள் இன்று(அதாவது நேற்று) நிவாரணம் வழங்குவதாக சொல்லவில்லையே என தெரிவித்தனர். இந்த தகவலை பொதுமக்களிடம் போலீசார் கூறினர். இதனையடுத்து பொதுமக்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்