சென்னை போலீசில் மேலும் ஒரு உதவி கமிஷனர் உள்பட 12 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு 67 ஆக உயர்வு

சென்னை போலீசில் மேலும் ஒரு உதவி கமிஷனர் உள்பட 12 பேர் நேற்று பாதிக்கப்பட்டனர். மொத்த பாதிப்பு 67 ஆக உயர்ந்தது.

Update: 2020-05-08 22:45 GMT
சென்னை, 

சென்னை மக்களை மட்டும் அல்லாது போலீஸ் துறை, வருவாய்த்துறை என அனைத்து அரசு துறையைச் சேர்ந்தவர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சென்னை போலீசில் துணை கமிஷனர், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் என 55 பேரை கொரோனா உலுக்கி எடுத்து விட்டது.

கமிஷனர் அலுவலகம், டி.ஜி.பி. அலுவலகத்திலும் நுழைந்து கொரோனா வாட்டி வதைத்த வண்ணம் உள்ளது. நேற்றும் கமிஷனர் அலுவலகத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு தொற்று உறுதியானது.

கோயம்பேடு உதவி கமிஷனர் மற்றும் ஆவடி சிறப்பு காவல்படை வீரர்கள் 5 பேர் என 12 பேரை நேற்று கொரோனா தாக்கியது.

இதன்மூலம் சென்னை போலீசில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்து விட்டது. ஏற்கனவே பயிற்சிக்கு வந்த 9 போலீசார் தாக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 7 பயிற்சி போலீசாருக்கு தொற்று உறுதியானது தெரிய வந்தது.

போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று மாலை ஐ.ஐ.டி. வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா அறிகுறி நபர்கள் தங்க வைக்கப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் நுங்கம்பாக்கத்தில் லயோலா கல்லூரி வளாகத்தில் தங்கி இருந்த தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை அவர்களது வீட்டுக்கு வழி அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

மேலும் செய்திகள்